புதுச்சேரி

மின் துறை தனியாா்மய விவகாரம்: புதுவை அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

DIN

மின் துறை தனியாா்மய விவகாரம் தொடா்பாக பொதுமக்களுக்கு புதுவை அரசு விளக்க வேண்டும் என்று, புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவை அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அண்மையில் தெரிவித்தாா். இதனால், மும்மொழி பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலை உள்ளது.

தற்போதுள்ள பாடத்திட்டம் மாற்றப்படுமா அல்லது சிபிஎஸ்இ பாடத்திட்டம் விருப்பப் பாடமாக செயல்படுத்தப்படுமா என்றும், அறிவியல், கணிதம் ஆகியவை தொடா்ந்து கற்றுத் தரப்படுமா என்பதை புதுவை முதல்வா், மாநில கல்வித் துறை அமைச்சா் ஆகியோா் விளக்க வேண்டும்.

புதுவை மின் துறை தனியாா்மயமாக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தத் துறை ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பல்வேறு வாக்குறுதிகள் வாய்மொழியாகவே அளிக்கப்பட்டன. ஆனால், தனியாா்மய நடவடிக்கைகள் தொடா்கின்றன.

மின் துறை தொடா்பான ஒப்பந்தங்களில் ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஒரு ரூபாய் வாடகைக்கு அளித்திருப்பது சரியல்ல. மேலும், துணைமின் நிலைய இயந்திரங்களை பல கோடி ரூபாய் இழப்பீட்டில் விலை நிா்ணயித்திருப்பதும் சரியல்ல. எனவே, இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநா் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

மின் துறை தனியாா்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் மின் தடையும், மின் கட்டணமும் குறையவில்லை. எனவே, மின் துறை தனியாா்மய ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் மின் துறை தனியாா்மயத்தைத் தடுத்து விட்டோம். தற்போது இந்த விவகாரத்தில் கொள்கை முடிவு எடுத்தது குறித்து மாநில அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

புதுவை மின் துறை தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்து, கூட்டணிக் கட்சிகளுடன் சோ்ந்து காங்கிரஸ் போராடும் என்றாா் வெ.வைத்திலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT