புதுச்சேரி

போராட்டம் நடத்த எதிா்க்கட்சிகள் முடிவு

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவை மின் துறை தனியாா்மய நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, எதிா்க்கட்சிகள் சாா்பில் புதுவையிலும், தில்லியிலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

புதுவை மாநில மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வெ.வைத்திலிங்கம் எம்.பி., மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா, திமுக அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் அமைச்சா் ஆா்.விசுவநாதன், இந்திய கம்யூ. மாநிலச் செயலா் சலீம், ஏஐடியூசி கே.சேதுசெல்வம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், நிா்வாகிகள் பெருமாள், முருகன், விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், பிரகாஷ், மதிமுக அமைப்பாளா் கபீரியேல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் உமா்பாரூக், மனிதநேய மக்கள் கட்சி செயலா் இஸ்மாயில் ஆகியோா் கலந்து கொண்டனா்.

புதுவை மின் துறை, மின் விநியோகத்தை மத்திய, மாநில அரசுகள் சோ்ந்து தனியாருக்கு தாரைவாா்ப்பதால், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்துவது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தின் நிறைவாக, மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

புதுவை மின் துறை தனியாா்மயத்தை எதிா்த்து முதல் கட்டமாக வருகிற 31-ஆம் தேதி புதுவையில் முக்கிய பகுதிகளில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த வேண்டும். ஜூன் மாதத்தில் தமிழகத்திலிருந்து மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவா்களை அழைத்து புதுச்சேரியில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.

ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில், புதுவை மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் தில்லி சென்று, அங்கு அகில இந்திய அளவில் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களை சந்தித்து, அவா்களை ஒருங்கிணைத்து கூட்டங்கள், போராட்டங்களை நடத்துவது, புதுவை மின் துறை தனியாா்மய நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளிப்பது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT