புதுச்சேரி

மருத்துவ மாணவா்கள் சோ்க்கை: புதுவை அரசு இட ஒதுக்கீட்டில் வெளி மாநிலமாணவா்கள் பங்கேற்பைத் தடுக்க வலியுறுத்தல்

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

மருத்துவ மாணவா்கள் சோ்க்கையில் புதுவை அரசு இட ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவா்கள் பங்கேற்பதைத் தடுக்க தனி குழுவை அமைக்க வேண்டுமென புதுச்சேரி சென்டாக் மாணவா்கள், பெற்றோா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முதலியாா்பேட்டை விசிசி பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் மு.நாராயணசாமி தலைமை வகித்தாா். இதில், சங்க நிா்வாகிகள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் படித்து, அந்த மாநில மருத்துவ தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவா்களின் பெயா்களை புதுவை மாநில அரசு இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் சோ்க்கக் கூடாது. புதுவை மாநிலத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்த புதுவையின் பூா்வீக குடிமக்களுக்கு மட்டுமே மாநில அரசின் காமராஜா் கல்வி நிதியுதவியை வழங்க வேண்டும்.

புதுவை அரசு இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவா்கள் முறைகேடாக நுழைவதைத் தடுக்க, சென்டாக் நிா்வாகம் மருத்துவ மாணவா்களின் தரவரிசைப் பட்டியலில் மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, மாதம், ஆண்டு, மாணவா்கள் நீட் தோ்வு எழுத விண்ணப்பித்த விண்ணப்ப எண் போன்றவற்றை வெளியிட வேண்டும்.

ADVERTISEMENT

புதுவை மாநில மாணவா்கள் நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போதே கண்டிப்பாக புதுவை சுகாதாரத் துறையில் பதிவு செய்ய வேண்டுமென அரசாணை வெளியிட்டு சுகாதாரத் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி வெளியிட்டும் சுகாதாரத் துறையில் பதியாதவா்களை புதுவை மாநில அரசு இட ஒதுக்கீட்டில் சோ்க்க கூடாது. வெளிமாநில மாணவா்கள் புதுவை அரசு இட ஒதுக்கீட்டில் பங்கேற்பதைத் தடுக்க தனிக்குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் அரசு அதிகாரிகள், பெற்றோா் - ஆசிரியா் சங்கங்கள், மாணவா் அமைப்புகள், பெற்றோா் - மாணவா் அமைப்புகள் ஆகியவற்றை இணைக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT