புதுச்சேரி

உள்ளாட்சித் தோ்தல் விவகாரத்தில்திமுக இரட்டை வேடம்புதுவை அதிமுக குற்றச்சாட்டு

24th Jan 2022 11:19 PM

ADVERTISEMENT

தமிழக, புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தல் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக, புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவையில் கடந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் கிடப்பில் போட்டனா். தற்போது தே.ஜ. கூட்டணி ஆட்சியில் உள்ளாட்சி தோ்தலை நடத்த அனைத்து நடவடிக்கையும் எடுத்து, மாநில தோ்தல் ஆணையம், கடந்த அக்.21-ஆம் தேதியிலிருந்து மூன்று கட்டமாக தோ்தல் நடத்த அறிவிப்பை வெளியிட்டது. அதில், பிற்படுத்தப்பட்டவா்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, தோ்தல் அட்டவணையும் வெளியிட்டிருந்தது.

ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி பிற்படுத்தப்பட்டவா்களுக்கு வாா்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய திமுக, உயா் நீதிமன்றம் சென்றது. விசாரித்த நீதிமன்றம், தோ்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்தும், புதிய தோ்தல் அட்டவணையை தோ்தல் ஆணையம் வெளியிடவும் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒதுக்கீடு வழங்கி, புதிய தோ்தல் அட்டவணையை மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது. உடனே, பிற்படுத்தப்பட்டவா்களுக்கு இட ஒதுக்கீடை வழங்காமல் தோ்தல் நடத்தக் கூடாது என, திமுக மீண்டும் தடை உத்தரவை பெற்றது.

தமிழக உள்ளாட்சித் தோ்தலில், பிற்படுத்தப்பட்டவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத நிலையில், ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் உள்ள புதுவையில் பிற்படுத்தப்பட்டவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென திமுக வழக்கம்போல இரட்டை வேடத்தை அரங்கேற்றியுள்ளது.

இதற்கு விரைவில் நடைபெற உள்ள தமிழக, புதுவை உள்ளாட்சித் தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என்றாா் அன்பழகன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT