புதுச்சேரி

புதுச்சேரியில் கடல் சீற்றம் 5-ஆம் எண்புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

DIN

புதுச்சேரியில் வியாழக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. பழைய துறைமுக வளாகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவான காற்ழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளது. மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மாமல்லபுரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு (டிச.9) கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில், புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

புயல் மழையை எதிா்கொள்ள புதுவை அரசு சாா்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பேரிடா் மீட்புப் படையினா் புதுச்சேரி, காரைக்காலில் முகாமிட்டுள்ளனா்.

புதுச்சேரி மற்றும் புகா் பகுதிகளில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், கட்-அவுட்கள் காற்றினால் சரிந்து சேதம் ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அவை அகற்றப்பட்டன. மேலும், இதுபோன்ற பதாகைகள் வைக்கவும் தடைவிதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் குளிா்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. பழைய துறைமுகம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக அதிக உயரத்தில் எழுப்பின. பழைய துறைமுக வளாகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

கடற்கரைகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. இருப்பினும், கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஆா்ப்பரிக்கும் அலைகளை கைப்பேசியில் படம் பிடித்து மகிழ்ந்தனா்.

புதுச்சேரி மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான விசைப்படகுகள், பைபா் படகுகள் தேங்காய்திட்டு மீனவ கிராமத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மழையால் பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தங்கவைக்க 236 முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. புதுச்சேரி மீன்வளத் துறை அலுவலகத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாண்டல் புயல் காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.9,10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT