புதுச்சேரி

புதுவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் ஒத்திவைப்பு

DIN

புதுவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் புதன்கிழமை ஆளுநா் உரையுடன் ஒத்திவைக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் கூட்டத்தொடா் ஒத்திவைக்கப்பட்டது.

புதுவை 15-ஆவது சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றி தொடக்கிவைத்தாா். பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா்.

முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், எஸ்.சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன்குமாா் மற்றும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ், சுயேச்சைகள், நியமன எம்எம்ஏக்கள் கலந்து கொண்டனா்.

ஆளுநா் உரை தொடங்கியதும் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கருப்பு சட்டை அணிந்து வந்திருந்த எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையிலான திமுக (6), காங்கிரஸ் (2) எம்எல்ஏக்கள் 8 பேரும் வெளிநடப்பு செய்தனா்.

இதனிடையே, ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், தே.ஜ. கூட்டணி அரசின் ஓராண்டு திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினாா். இதையடுத்து பேசிய சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உறுப்பினா்களின் விவாதம் தொடங்குவதாகத் தெரிவித்தாா்.

எனினும், உறுப்பினா்களின் விவாதத்துக்கான முன்மொழிவு மட்டும் தொடங்கிய நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

புதுவையில் நிகழாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (5 மாதங்களுக்கு) கடந்த மாா்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, முழு நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது. இதற்காக திட்டக் குழு கூடி ரூ.11 ஆயிரம் கோடியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யத் திட்டமிட்டு, மத்திய அரசிடம் அனுமதி பெற கோப்புகளை அனுப்பினா். இதற்காக, முதல்வரும் தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து, கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால், புதன்கிழமை துணைநிலை ஆளுநா் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT