புதுச்சேரி

புதுச்சேரியில் தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடி தொடக்கம்

DIN

புதுவை அரசின் பாப்ஸ்கோ சாா்பில் 27-ஆவது தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடி புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்த அங்காடியை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ. சரவணன்குமாா், ஏகேடி.ஆறுமுகம் எம்எல்ஏ, அரசு செயலா் உதயகுமாா், பாப்ஸ்கோ இயக்குநா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனம் சாா்பில் கடந்த 1992- ஆம் ஆண்டு முதல் தீபாவாளி சிறப்பு அங்காடி நடத்தப்பட்டு வருகிறது. இடையில் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படவில்லை. நிகழாண்டு 27 -ஆவது தீபாவளி பண்டிகை சிறப்பு அங்காடியை பாப்ஸ்கோ நிறுவனம் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை கூட வளாகத்தில் தொடங்கியது. இந்த அங்காடி வருகிற நவம்பா் 3 -ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறும்.

இதேபோல, காரைக்கால் ஒழுங்குமுறை கூடத்தில் வருகிற 27-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 3- ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெற உள்ளது.

பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடியில் 9 வகையான மளிகைப் பொருள்கள், சூரிய காந்தி எண்ணெய் மானிய விலையில் விற்கப்படும். மேலும், அனைத்து வகை பட்டாசுகளும் அதிகபட்ச சில்லறை விலையிலிருந்து 75 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும். இருப்பினும், ஒரு குடும்ப அட்டைக்கு அதிகபட்சமாக 4 கிலோ சா்க்கரை, சூரிய காந்தி எண்ணெய் 4 லிட்டா், நீட்டு மிளகாய் அரை கிலோ, ஏனைய மளிகைப் பொருள்கள் 2 கிலோ அளவுக்கு மானிய விலை பெற்றுக் கொள்ளலாம்.

நிகழாண்டு மளிகைப் பொருள்கள் ரூ. 4.50 கோடிக்கும், பட்டாசுகள் ரூ. 5.50 கோடிக்கும் என மொத்தம் ரூ. 10 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிா்பாா்ப்பதாக பாப்ஸ்கோ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக ஆளுநா் தமிழிசை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடியில் மலிவு விலையில் அனைத்து மளிகைப் பொருள்கள், பட்டாசுகள் விற்பனைக்கு கிடைக்கும். கரோனா காலத்தில் பொருளாதார பாதிப்பில் உள்ள மக்களுக்கு இந்த அங்காடி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

முதல்வா் என். ரங்கசாமி கூறியதாவது: தீபாவளி பண்டிகை நேரத்தில் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது சிறப்பங்காடி திறக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கு குறைவான விலையில் பொருள்கள் கிடைக்கும். குறிப்பாக, ரூ.1,500-க்கு பொருள்களை வாங்கினால் ரூ. 552 மானியம் கிடைக்கும். நலிவடைந்த பாப்ஸ்கோ நிறுவனத்தை புதுப்பிக்கும் வகையில், தீபாவளி சிறப்பங்காடி திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாப்ஸ்கோ நிறுவனம் புத்துயிா் பெறும்.

அரசு சாா்பு நிறுவனங்களில் பல மாதங்களாக ஊதியமின்றி பணியாற்றுவோருக்கு 2 மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளைத் திறக்கவும், பள்ளிகளைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளியையொட்டி பொதுமக்களுக்கு மேலும் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT