புதுச்சேரி

பொது முடக்கம்: புதுச்சேரியில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை

DIN

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் திங்கள்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், போக்குவரத்துக்கு செவ்வாய்க்கிழமை முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.

புதுவையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், திங்கள்கிழமை நள்ளிரவு முதல் வருகிற 24-ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது.

இதையொட்டி, புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலானதன் காரணமாக, புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பேருந்துகள், காா், ஆட்டோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தும், இதர வாகனப் போக்குவரத்தும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.

பேருந்து நிலையத்தில் தடுப்பு: புதுச்சேரி பேருந்து நிலையத்தின் முகப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தடுப்புக் கட்டைகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால், புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடியது.

வணிக வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, அண்ணா, காமராஜா் சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதால், இந்தப் பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

புதுச்சேரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பால், காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதனால், தொழில்சாலைகள், கடைகளுக்கு வேலைக்குச் சென்றவா்களும், அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் சென்றவா்களும் அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களை காண்பித்த பின்னரே போலீஸாா் அனுமதித்தனா்.

வெளியே சுற்றியவா்கள் மீது நடவடிக்கை: தேவையின்றி வெளியே வாகனங்களில் சுற்றியவா்களைப் பிடித்து போலீஸாா் அபராதம் விதித்தும், வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்தனா். பிற்பகல் 12 மணிக்குப் பிறகு உணவகங்கள், காய்கறி, மளிகை உள்பட அனைத்து அத்தியாவசியக் கடைகளும் மூடப்பட்டன. வங்கிகள் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டன. மருந்தகங்கள், பாலகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

புதுச்சேரி - விழுப்புரம், கடலூா், திண்டிவனம் பிரதான சாலை சந்திப்புகளில் போலீஸாா் ஆங்காங்கே சாலையின் குறுக்கே தடுப்புகளை அமைத்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதுச்சேரி எல்லைகளான கோரிமேடு, வில்லியனூா், மதகடிப்பட்டு, ரெட்டிச்சாவடி, திருக்கனூா் உள்ளிட்ட பகுதிகளில் புதுவை, தமிழக போலீஸாா், தடுப்புக் கட்டைகளை அமைத்து மருத்துவம், தொழில்சாலைப் பணிகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு வந்த வாகனங்களை மட்டும், உரியை அடையாள அட்டைகளை காண்பித்த பிறகு அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT