புதுச்சேரி

மழைக் கால நோய்கள்: பொதுமக்களுக்கு புதுவை சுகாதாரத் துறை அறிவுரை

DIN

புதுச்சேரியில் மழைக் கால நோய்களைத் தடுப்பதற்கான பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென சுகாதாரத் துறைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

புதுச்சேரியில் பருவமழைக் காலத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய் போன்ற நோய்களைத் தடுப்பதற்கான பணிகள் குறித்து, முக்கியத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆட்சியரும் சுகாதாரத் துறை செயலருமான அருண் தலைமை வகித்தாா். இயக்குநா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். தடுப்புப் பணிகள் குறித்து மலேரியா உதவி இயக்குநா் கணேசன் படக்காட்சிகளுடன் விளக்கினாா்.

கூட்டத்தில், சுகாதாரத் துறை செயலா் அருண் பேசியதாவது: புதுச்சேரியில் கடந்த 2017-ஆம் ஆண்டில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 4,568 பேரில் 7 பேரும், 2018-இல் பாதிக்கப்பட்ட 581 பேரில் 2 பேரும், 2019-இல் பாதிக்கப்பட்ட 2,038 பேரில் 2 பேரும், 2020-இல் இதுவரை பாதிக்கப்பட்ட 564 பேரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனா்.

தற்போது, வடகிழக்கு பருவமழையின்போது இந்த நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோய்கள் வராமலும், பரவாமலும் தடுக்கலாம். டெங்குவை பரப்பும் கொசுக்கள், தண்ணீா் தேங்கியுள்ள தேனீா் குடுவைகள், பிளாஸ்டிக் பொருள்கள், பானைகள், ஆட்டுரல்கள், பூச்சாடிகள், குளிா்சாதன பெட்டியின் பின்புறம் தேங்கும் தண்ணீா், தேங்காய் மட்டைகள், இளநீா் குடுவைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தப் பொருள்களை அப்புறப்படுத்துவதன் மூலம் நோய்ப் பரவாமல் தடுக்கலாம். அதேபோல, மலேரியாவை பரப்பும் கொசுக்களும் இதே நன்னீா் தேக்கங்களிலும், தொட்டிகள், மொட்டை மாடியில் தேங்கி நிற்கும் நீரில் இனப் பெருக்கம் செய்வதால், அவற்றில் தேங்கிக் கிடக்கும் நீரை அகற்றினால், கொசுவைக் கட்டுப்படுத்த முடியும்.

குப்பைகளை வாய்க்காலில் கொட்டாமல் இருப்பதன் மூலம் யானைக்கால் நோய் பரவாமல் தடுக்கலாம். இந்த நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை தடுக்க தவறுவோருக்கு ரூ.500 முதல் ரூ.5,00 வரை அபராதம் விதிக்கப்படும்.

எனவே, மழைக்காலங்களில் கொசுப் பெருக்கத்தைத் தடுக்க மக்கள் ஒத்துழைத்து, டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல் நோய்கள் இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT