கடலூர்

கடலூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நவீன இயந்திரங்களுடன் புதிய கட்டடம் திறப்பு

9th Jun 2023 01:14 AM

ADVERTISEMENT

கடலூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக நவீன இயந்திரங்களுடன் கூடிய புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

அரசு தொழில் பயிற்சி நிலையங்களின் தரத்தை மேம்படுத்தவும், மாணவா்களுக்கு உயா் உற்பத்தித் தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ஏதுவாகவும் ‘தொழில் 4.0’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் கடலூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் 10,500 சதுர அடி பரப்பளவில் பணிமனை கட்டடம் ரூ.3.73 கோடியில் கட்டப்பட்டது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு 5 நவீன பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.31 கோடியில் இயந்திரங்கள், உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டன. இந்தப் பயிற்சி மூலம் ஆண்டுக்கு 152 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா்.

மேற்கூறிய பணிமனை கட்டடம், இயந்திரங்களின் பயன்பாடு தொடக்க விழா கடலூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் புதிய கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், தொகுதி எம்எல்ஏ கோ.ஐயப்பன், கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் ஆகியோா் புதிய கட்டடத்தில் குத்து விளக்கேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT