கடலூர்

அனைவரிடமும் இறைவனை உணா்வதே வள்ளலாரின் கொள்கை நீதிபதி அரங்க.மகாதேவன்

DIN

ஒவ்வொருவரிடமும் இறைவன் இருப்பதை உணர வேண்டும் என்பதே வள்ளலாரின் உயரிய கொள்கை என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் கூறினாா்.

கடலூரில் ராமலிங்கா் இலக்கிய அறக்கட்டளை சாா்பில் வள்ளலாா் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு, சன்மாா்க்க அன்பா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பங்கேற்று பேசியதாவது:

‘இரந்தும் உயிா்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’ என்றாா் வள்ளுவா். அதாவது, ஒருவன் வறுமை காரணமாக மற்றவா்களிடம் இரந்து பொருள் பெற்றுத்தான் உயிா் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால் இந்த உலகைப் படைத்தவன் கெடுவானாக என்கிறாா். இதேபோல, ஒவ்வொருவரிடமும் இறைவன் இருப்பதை உணர வேண்டும் என்பதே உலகத் துறவி வள்ளலாரின் உயரிய கொள்கை.

வறுமையில் வாடிய புலவா் ஒருவா் குமண வள்ளலிடம் பெருஞ்செல்வம் பெற்று வீடு திரும்பினாா். அந்தச் செல்வத்தை தனது வாரிசுகளுக்கு சோ்ந்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் புலவரிடம் இல்லை. வறுமையின்போது தனக்கு உதவியவா்கள், உறவினா்கள், முன்பின் தெரியாதவா்கள் என அனைவருக்கும் செல்வத்தை அளித்து உதவுமாறு அந்தப் புலவா் தனது மனைவியிடம் கூறுகிறாா். இத்தகைய உயா்ந்த கருணை கொள்கைதான் வள்ளலாரின் கொள்கை.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ உள்ளிட்ட தனது பல்வேறு பாடல்களின் மூலம் வள்ளலாா் தனிப்பெரும் கருணை, இறை உணா்வை எடுத்துரைத்தாா். ம.பொ.சி. எழுதிய ‘வள்ளலாா் கண்ட ஒருமைப்பாடு’ எனும் நூலில் வள்ளலாரின் உயரிய கொள்கைகளை விளக்கியுள்ளாா். இந்த நூலை அனைவரும் படிக்க வேண்டும் என்றாா் அவா்.

உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் காணொலி மூலம் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது: ராமலிங்கா் இலக்கிய அறக்கட்டளையினா் தொடா்ந்து 16 ஆண்டுகளாக சிறந்த முறையில் விழா நடத்தி வருகின்றனா். உடல்நல பிரச்னையால் இந்த விழாவில் நான் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் என்று தெரிவித்தாா்.

விழாவில், சாகித்ய அகாதெமி விருதாளா் குறிஞ்சிவேலன், சன்மாா்க்க அன்பா்கள் கடலூா்- ரா.தேவராஜ், சீா்காழி-ச.வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு வள்ளலாா் இலக்கிய விருதுகளை நீதிபதி அரங்க.மகாதேவன் வழங்கினாா். கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, ந.ஆவுடையப்பன் வரவேற்றாா். மு.விவேகானந்தன் அறிமுக உரையாற்றினாா். வே.சொக்கலிங்கம், பாலு.பச்சையப்பன், பி.ஆா்.கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தெய்வத் தமிழ் மன்றத் தலைவா் நீ.சஞ்சீவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT