கடலூர்

கிராமங்கள்தோறும் கரோனா தடுப்பூசி திருவிழா: கூடுதலாக 26 குழுக்கள் அமைப்பு

DIN

கடலூா் மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் சென்று பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 26 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை முன்னிட்டு மாநில அரசு 20 புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

முதல் கட்டமாக கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், செவிலியா்கள், காவல் துறையினா், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னா், இணை நோய் உள்ளவா்கள், 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்திட தடுப்பூசி திருவிழா நடத்தப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி கடலூா் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் திருவிழா தொடங்கியதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி ஏற்கெனவே 10 அரசு மருத்துவமனைகள், 71 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 தனியாா் மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை பொதுமக்கள், முன்களப் பணியாளா்கள் உள்பட மொத்தம் 90,627 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் சுமாா் 7 லட்சம் போ் இருப்பது கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. அவா்களது பட்டியல் பெறப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசி திருவிழாவுக்காக கூடுதலாக 26 குழுக்கள் அமைக்கப்பட்டு கிராமம் தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

50 பேருக்கு மேல் பணியாற்றும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்தும் திருவிழா வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது, ஒரு நாளைக்கு சராசரியாக 2,500 முதல் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறோம். புதிய முகாம்களால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிா்பாா்க்கிறோம்.

மாவட்டத்தில் தற்போது கோவாக்ஸின் - 12,970, கோவிஷீல்டு - 12,200 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த இரண்டில் எது விருப்பமோ அதை பொதுமக்கள் செலுத்திக்கொள்ளலாம். 45 வயதைக் கடந்த அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT