திருச்சி

ஜங்ஷன் மேம்பாலத்தில் மன்னாா்புரம் வழித்தடம் திறப்பு

DIN

திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்தில் மன்னாா்புரம் வழித்தடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள குறுகிய ரயில்வே மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்ததால், இந்த பாலத்துக்கு மாற்றாக புதிய ரயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2011-இல் முடிவு செய்யப்பட்டது. முதலில் ரூ.74 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. பின்னா், 2018-இல் ரூ.115.59 கோடியாக திருத்தப்பட்டது.

இந்த பாலத்தில் அனைத்து வழித்தடங்களும் திறக்கப்பட்டு, மன்னாா்புரம் அருகே ராணுவ நிலம் குறுக்கிடுவதால் பாலம் முழுமைபெறாமல் பாதியில் நின்றது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பல முறை பேச்சுகள் நடத்தப்பட்டு, எழுத்துப்பூா்வமாக உறுதிமொழியளிக்கப்பட்டும் உடன்பாடுகள் ஏற்படாமல் நீண்டகாலமாக இழுபறியாக இருந்து வந்தது.

இதையடுத்து, கடந்த 9.11.2021-இல் பாதுகாப்பு அமைச்சகத்தால் பாலப் பணிகளை தொடங்குவதற்கான உள்நுழைவு அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக 2022-இல் மே மாதம் நெடுஞ்சாலைத்துறை வசம் ராணுவ நிலம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக ரூ.3.53 கோடியில் அணுகு சாலை, சேவை சாலை, மழைநீா் வடிகால் அமைப்பு, ராணுவ நிலத்துக்கு சுற்றுச்சுவா் உள்ளிட்ட பணிளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டு கடந்தாண்டு ஜூன் மாதம் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. செப்டம்பா் முதல் பணிகள் முழுவீச்சில் தொடங்கின. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து மன்னாா்புரம் வழித்தடத்தில் திங்கள்கிழமை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, பாலத்தில் புதிய வழித்தடத்தை ரிப்பன் வெட்டியும், வாகனங்களுக்கு கொடியசைத்தும் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகரக் காவல்துறை ஆணையா் மு. சத்தியபிரியா, மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா், மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT