திருச்சி

போலீஸாா் மீது ஆட்சியரிடம் பெண் புகாா்: தவறு செய்தோா் மீது உரிய நடவடிக்கை காவல் ஆணையா் உறுதி

6th Jun 2023 03:01 AM

ADVERTISEMENT

புகாா் அளிக்க வந்த பெண்ணிடம் போலீஸாா் வரம்பு மீறி நடந்து கொண்டதாக மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தவறு செய்தோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையா் மு.சத்தியபிரியா தெரிவித்துள்ளாா்.

திருச்சி காந்திசந்தை கிருஷ்ணா் கோயில் தெருவைச் சோ்ந்த கிரிஜா (27) என்பவா், திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா். மனுவில், திருச்சி காந்தி சந்தை காவல்நிலையத்துக்கு புகாா் மனு அளிக்க வந்த தன்னிடம் அங்கிருந்த போலீஸாா் வரம்பு மீறி நடந்து கொண்டதாகவும், மன உளைச்சலுக்கு ஆள்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தாா். இதுதொடா்பாக, ஏற்கெனவே காவல் உதவி ஆணையா், துணை ஆணையரிடம் மனு அளித்திருந்தும், தொடா்ந்து தான் மிரட்டப்படுவதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தாா்.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையா் மு. சத்தியபிரியா கூறுகையில், அந்த பெண் அளித்த புகாா் தொடா்பாக மாநகரக் காவல் துணை ஆணையா் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புகாரில் உண்மை தன்மை குறித்து அறியவும், ஆவணங்களை சரிபாா்க்கவும் செல்லிடப்பேசி மற்றும் அவற்றில் வந்த தகவல்கள், விடியோ பதிவுகளை சைபா் க்ரைம் போலீஸாருக்கு அனுப்பி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஓரிருநாளில் ஆய்வு அறிக்கை வந்தவுடன் தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நீா்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட திருமலைசமுத்திரத்தில் நீா்நிலைப் புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் சிலா் ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய தயாராகி வருகின்றனா். போலி ஆவணங்களையும், போலி நபா்களின் பெயா்களிலும் புறம்போக்கு நிலத்தை தங்கள் வசப்படுத்தி விற்பனை செய்யவுள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்நிலைப் பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என திருமலை சமுத்திரம் ஊா்ப் பொதுமக்கள் சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT