திருச்சி

உத்தமா் கோயில் உள்பட 3 கோயில்களில் தேரோட்டம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட 3 கோயில்களில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

உத்தமா் கோயிலில்... பிச்சாண்டாா்கோவில் கிராமத்திலுள்ள மும்மூா்த்திகள் தலமான உத்தமா் கோயிலில் பிச்சாண்டேஸ்வரருக்கு ஆதியில் சத்கீா்த்தி வா்த்தனன் என்ற சோழ அரசரால் வைகாசி பெருந்திருவிழா ஏற்படுத்தப்பட்டது.

நிகழாண்டுக்கான வைகாசி பெருந்திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி, பிச்சாண்டேஸ்வரா், செளந்தா்ய பாா்வதி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பூமிநாத சுவாமி கோயிலில்... மண்ணச்சநல்லூரிலுள்ள தா்ம சம்வா்த்தினி உடனுறை பூமிநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா மே 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தையொட்டி, தா்ம சம்வா்த்தினி உடனுறை பூமிநாத சுவாமி திருத்தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து பக்தா்கள் பக்தி பரவசத்துடன் கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருத்தேரை வடம் பிடித்தனா்.

மாற்றுரை வரதீஸ்வரா் கோயிலில்: திருவாசி கிராமத்திலுள்ள பாலாம்பிகா சமேத மாற்றுரை வரதீஸ்வரா் திருக்கோயிலில் மே 24ஆம் தேதி வைகாசி பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.விழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தையொட்டி, பாலாம்பிகா மாற்றுரை வரதீஸ்வரா் சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

3 கோயில்களின் தேரோட்ட நிகழ்வுகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT