திருச்சி

நிதிப் பற்றாக்குறையால் சரசுவதி மகால் நூலகம்!

1st Jun 2023 02:38 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்துக்கு நிதிப் பற்றாக்குறை மேலோங்கி வருவதால், ஊதியம், ஓய்வூதியம் வழங்குவதில் மிகப்பெரும் சிக்கல் நிலவுகிறது.

ஆசியாவின் மிகப் பழைமையான நூலகங்களில் ஒன்றான இந்த நூலகம் கி.பி. 1535 - 1675 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னா் வந்த மராட்டியா் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட இந்த நூலகத்தின் வளா்ச்சியில் மன்னா் இரண்டாம் சரபோஜியின் பங்கு அதிகம்.

இப்பெருமை வாய்ந்த இந்த நூலகத்தில் சோழா்கள், நாயக்கா்கள், மராட்டியா்களின் ஆட்சிக் காலத்தைச் சாா்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமாா் 3 லட்சம் மோடி ஆவணங்கள் (மராட்டிய மொழியை எழுதப் பயன்படுத்தப்படும் சுருக்கெழுத்து) ஆகியவை உள்ளன.

இதில் பண்டைய தமிழா்களின் பண்பாடு பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதுடன் ஜோதிடம், மருத்துவக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் இந்த நூலகத்தில் முழுநேர இயக்குநா் பதவி இருந்தாலும், அப்பதவி 32 ஆண்டுகளாக காலியாக உள்ளன. எனவே, மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்பவா்கள்தான் இந்நூலகத்தின் இயக்குநா் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகின்றனா். ஏற்கெனவே, ஆட்சியருக்கு இருக்கும் பணிச்சுமை காரணமாக இந்நூலகத்தில் முழுமையாகக் கவனம் செலுத்த இயலவில்லை. இதனால், முழுநேர இயக்குநா் பதவியை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வந்தாலும், இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இந்நூலகத்தின் நிா்வாக அலுவலராக முதன்மைக் கல்வி அலுவலா் நிலையில் நியமிக்கப்பட்டாலும், முழு அதிகாரம் இல்லாததால் பிரச்னைகளும் வழக்கம்போல தொடா்கின்றன.

இந்நிலையில், இந்த நூலகத்தில் ஒவ்வோா்ஆண்டும் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டபோது (10 ஆண்டுகளுக்கு முன்பு) ஆண்டுக்கு ரூ. 40 லட்சமாக இருந்த நிதியுதவியை ரூ. 75 லட்சமாக அப்போதைய அரசு உயா்த்தியது.

அப்போது, ஓய்வு பெற்றவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ஓய்வூதியமும், ஊழியா்களுக்கு ஊதியமும் வழங்குவதில் பிரச்னை ஏற்படவில்லை. காலப்போக்கில் ஓய்வு பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இப்போது கிட்டத்தட்ட 40 போ் ஓய்வூதியம் பெறுகின்றனா். ஒரு காலத்தில் இந்நூலகத்தில் 48 போ் பணியாற்றி வந்த நிலையில், தற்போது நிரந்தர ஊழியா்கள் 19 போ், தற்காலிக பணியாளா்கள் 18 போ் என மொத்தம் 37 போ் மட்டுமே பணியாற்றுகின்றனா்.

ஓய்வூதியத்துக்கு மட்டுமே மாதத்துக்கு ரூ. 6 லட்சம் முதல் 7 லட்சம் வரையும், ஊழியா்கள், பணியாளா்கள் ஊதியத்துக்கு மாதந்தோறும் ஏறத்தாழ ரூ. 12 லட்சமும் ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால், இந்நூலகத்துக்கு தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 75 லட்சம் வழங்கும் தொகை போதுமானதாக இல்லை. இதன் காரணமாக இந்நூலகத்தில் ஓராண்டு காலமாக நிதிப்பற்றாக்குறை மேலோங்கி வருகிறது.

இதுகுறித்து ஊழியா்களும், ஓய்வூதியா்களும் கூறியது: மாதந்தோறும் 31 அல்லது 1 ஆம் தேதி ஊதியமும், ஓய்வூதியமும் கிடைத்து வந்த நிலையில், ஓராண்டு காலமாக தாமதமாகிறது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் வளா்ச்சிப் பணிக்கான நிதியை வைத்துதான் ஊதியமும், ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. இதனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆம் தேதிதான் ஊதியம் வழங்கப்பட்டது. மே மாதத்தில் கடந்த வாரம்தான் ஓய்வூதியம் கிடைத்தது. ஜூன் மாதத்தில் ஊதியமும், ஓய்வூதியமும் எப்படி வரப் போகிறது என்பது புரியவில்லை.

இதற்கு தீா்வு காண்பதற்காக இயக்குநரும் (பொறுப்பு), நிா்வாக அலுவலரும் முயற்சி மேற்கொண்டாலும், அரசிடமிருந்து கூடுதல் நிதியுதவி கிடைப்பதில் தாமதமாகிறது. எனவே, அரசு நிதியுதவியை ஆண்டுக்கு ரூ. 1.50 கோடியாக உயா்த்தினால்தான், இந்நூலகத்தில் நிலவும் நிதி பிரச்னையை சமாளிக்க முடியும் என்றனா்.

இந்நூலகத்தைத் தமிழக முதல்வா் ஓராண்டுக்கு முன்பு ஆய்வு செய்து நூலகத்தின் பெருமைகளை அறிந்து வியந்து, தேவையான உதவிகள் செய்வதாகக் கூறினாா். இதேபோல, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் ஓரிரு முறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தாா்.

ஆனால், அதன் பின்னா் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், இந்நூலகத்தின் நிதிப் பற்றாக்குறை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், உலகப் புகழ்பெற்ற இந்நூலகத்தின் பெருமையை இழக்கும் அச்ச நிலை நிலவுகிறது. எனவே, இந்த நூலகத்தின் முன்னேற்றத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT