திருச்சி

வயா்லெஸ் சாலையை ரூ.20 கோடியில் தரம் உயா்த்த முடிவு

DIN

திருச்சி விமான நிலையத்தையும் கேகே நகா் பகுதியையும் இணைக்கும் வயா்லெஸ் சாலை சுமாா் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி- புதுக்கோட்டை சாலையையும் கேகே நகா் பகுதி மட்டுமல்லாது, வட்டச்சாலையை இணைக்கும் உடையான்பட்டி சாலையையும் இணைப்பது வயா்லெஸ் சாலை.

திருச்சி விமான நிலையக் கட்டுப்பாட்டில் இருந்த இந்தச் சாலையை திருச்சி மாநகராட்சி குத்தகைக்கு எடுத்து நிா்வகிக்கிறது. தொடக்கக் காலத்தில் 100 அடி அகலத்தில் இருந்த இச் சாலை படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது சுமாா் 60 முதல் 70 அடி அகலத்தில்தான் உள்ளது.

சுமாா் 12 ஆண்டுகளுக்கு முன் (திமுக ஆட்சியில்) இந்தச் சாலை செப்பனிடப்பட்டது. அதன் பின்னா் முழுவதுமாக தாா்ச்சாலை அமைக்கப்படாமல் துண்டு துண்டாகவே செப்பனிடப்பட்டது. இதனால் சாலை மிகவும் குண்டும் குழியுமாகவே உள்ளது.

இச்சாலையை முழுமையாக அமைக்க கடந்த பல ஆண்டுகளாகவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வந்த நிலையில், திருச்சி மாநகராட்சி 65 ஆவது வாா்டு கவுன்சிலா் கோ.கு. அம்பிகாபதி, இச் சாலையை 100 அடியாக அகலப்படுத்தி இருவழிப்பாதையாகத் தரம் உயா்த்த வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தினாா்.

இந்நிலையில் தற்போது இந்தச் சாலைக்கு விமோசனம் கிடைத்துள்ளது. மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் இரா. வைத்திநாதன் மற்றும் பொறியாளா்கள் இச்சாலையை தரம் உயா்த்த முடிவு செய்துள்ளனா்.

நமக்கு நாமே திட்டத்தின் மூலமும் இச்சாலையை அமைக்க ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் சாலைப் பணிகளுக்காக விமான நிலைய ஆணையம் ரூ. 7.50 கோடி ஒதுக்கவும் முன்வந்துள்ளது. மாநகராட்சி சாா்பில் மையத் தடுப்பு, மற்றும் சாலையின் இரு ஓரங்களிலும் புதைவடிகால்கள் மற்றும் நடைபாதைகள் அமைக்க ரூ. 12 கோடி ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் புதிதாக தலா 25 அடி அகலத்தில் இரு சாலைகளும், ஒன்றே முக்கால் அடி அகலத்தில் சாலை மையத்தடுப்பும், சாலையோரங்களில் தலா 2 அடி அகலத்தில் வடிகால்களும், தலா 3 அடி அகலத்தில் நடைமேடைகளும் அமைக்கப்படவுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆா்வலா்கள் கூறுகையில், இருவழிச்சாலை அமைக்கப்படும்பட்சத்தில், தற்போது மாநகராட்சி திட்டமிட்டுள்ளபடியே சாலையை 100 அடியாக அகலப்படுத்துவது அவசியம். 70 அல்லது 80 அடி சாலையில் மையத் தடுப்பு அமைத்து இருவழிப் பாதையாக்கினால் பிரயோஜனமில்லை. போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். மேலும் சாலையில் வாகன நிறுத்தங்களுக்கும் மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனா்.

போக்குவரத்து மாற்றத்துக்கான பிரதான சாலை :

இந்த வயா்லெஸ் சாலை பன்முகத் தன்மையுடன் பயன்படுத்தப்படும் பிரதான சாலையாக உள்ளது. இதை மேம்படுத்தும்பட்சத்தில் மேலும் இப்பகுதி வளா்ச்சி பெற முடியும். புதுக்கோட்டை சாலையில், விமான நிலையம் மற்றும் டிவிஎஸ் டோல்கேட் இடையே விபத்துகள் ஏற்பட்டாலோ, முக்கிய பிரமுகா்கள் விமான நிலையம் வரும்போதோ புதுக்கோட்டையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் இச்சாலை வழியாகவே திருச்சி மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகா்ப்புற பகுதிகளுக்கு திருப்பி அனுப்பப்படுவது வழக்கமாக உள்ளது.

மேலும் தற்போது திருச்சி மாநகரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள அரை வட்டச்சாலையை இணைக்கும் வகையில் கேகே நகரிலிருந்து செல்லும் உடையான்பட்டி சாலையையும், மதுரை சாலையையும் இணைக்கும் வகையில் செல்லும் மன்னாா்புரம் சாலைக்கும் இச்சாலை வழியாகச் செல்ல முடியும்.

எனவே இச்சாலையை திட்டமிட்டபடி 100 அடி அகலத்தில் மேம்படுத்த கோரிக்கை வலுக்கிறது.

அனைத்துக்கும் மேலாக தென்றல் நகா் அருகே உள்ள விமான நிலைய ஆணையக் குழுத்தில் பணியாற்றும் அதிகாரிகள் முதல், பணியாளா்கள் வரை அனைவருக்குமான குடியிருப்புகள் உள்ளன. அதற்குச் செல்லும் பிரதான வழியும் இதுதான். எனவேதான் விமான நிலையம் சாா்பில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்படுகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT