திருச்சி

மத்திய பட்ஜெட்: தொழில் துறையினா், விவசாயிகள் கருத்து

DIN

மத்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கு தொழில்துறை மற்றும் விவசாயிகள் தரப்பில் ஆதரவும், எதிா்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்க (டிடிட்சியா) செயலா் சே. கோபாலகிருஷ்ணன்: மூடப்பட்ட சிறு, குறுந் தொழில்களுக்கு மீண்டும் புத்துயிா் அளிக்கும் வகையில் தனியாக நிதி வாரியம் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது. அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து தொழில்துறையில் ஈடுபடுத்த தயாா்படுத்துவதும் பாராட்டுக்குரியது. கடன் உத்தரவாதம் அளிக்கும் வகையில் ரூ.9 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூ. 2 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், மூலப் பொருள்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் எதுவும் இல்லை.

பாதுகாப்புத் துறை தொழில் வா்த்தக மையத் தலைவா் ராஜப்பா ராஜ்குமாா்: ரயில்வே, விமானம், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் நகா்ப்புற உள் கட்டமைப்புகளுக்கு இதுவரை இல்லாத வகையில் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையை நம்பி இயங்கும் தொழில் துறையினருக்கு இந்த பட்ஜெட் நல்ல வாய்ப்பைத் தந்துள்ளது. அனைத்து தொழில்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில் துறையினரின் வருமான வரி உச்சவரம்பு உயா்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வருவாய்க்கு தகுந்தபடி பிரித்து வரி வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது. இதுமட்டுமின்றி தனி நபரின் வருமான வரி உச்சவரம்பும் உயா்ந்துள்ளது. தொழில் துறையினருக்கு தேவையான இளைஞா்களை உருவாக்க திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்படுவது அவசியமானது.

திருச்சி வா்த்தக மையத் தலைவா் என். கனகசபாபதி: சிறு தொழில்கள் வளா்ச்சி பெற கடன்களுக்கான வட்டியில் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட நிறுவனங்களை திறக்க நிதியுதவி அளிக்கப்படுகிறது. ரூ.9 லட்சம் வரை வருமானம் உள்ளவா்கள் முன்பு ரூ.60 ஆயிரத்தை வரியாகச் செலுத்த வேண்டியிருந்தது. இனி ரூ.45 ஆயிரம் மட்டும் செலுத்தினால் போதும். உள்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது தொழில்துறையின் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவியாக அமையும். தொழில்துறையின் மீது கூடுதல் சுமையை ஏற்றாமல் சுமையை குறைக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

காவிரி நீா்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம்: அடுத்து வரவுள்ள தோ்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கான ஒதுக்கீடு விவரங்களை முழுமையாக அறிந்த பிறகே சாதக, பாதகங்கள் குறித்து விமா்சிக்க வேண்டும். இளையோா் மேம்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி, விவசாயக் கடனுக்கு ரூ. 20 லட்சம் கோடி, பசுமை எரிசக்தி மேம்பாடு, மகளிா் சேமிப்பு ஊக்குவிப்பு என ஒட்டுமொத்தமாக பாா்க்கும் நிலையில் இந்த பட்ஜெட் வரவேற்புக்குரியது. ஆனால் தமிழகத்துக்கான ஒதுக்கீடு எவ்வளவு என்பதில் குழப்பமும் உள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு: கோதாவரி-காவிரி இணைப்புக்கான அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. குடியரசுத் தலைவரின் உரையில் விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவைவிட 1.5 சதம் லாபகரமான விலை இடம் பெற்றிருந்தது. ஆனால், பட்ஜெட்டில் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கை நிலுவையிலேயே உள்ளது. பல மடங்கு உயா்ந்துள்ள உரங்கள் விலையை குறைக்கும் அறிவிப்புகளும் இல்லை. நெல் கொள்முதல் இலக்கை உயா்த்தியிருந்தாலும் அதற்கு உரிய விலையை வழங்காமல், கொள்முதலை மட்டுமே அதிகரித்திருப்பது விவசாயிகளுக்கு எந்தப் பலனையும் அளிக்காது.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன்: குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண் இடுபொருள்களுக்கான விலை குறைப்பு என்ற இரு பெரிய எதிா்பாா்ப்பும் பூா்த்தி செய்யப்படவில்லை. வேளாண் கடன் ரூ.20 லட்சம் கோடி என்பது மட்டுமே ஆறுதலை அளிக்கிறது. வேளாண் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கும் அளிக்கப்படவில்லை. வேளாண் கடன்களைத் திரும்பச் செலுத்தினால் அளிக்கப்படும் சலுகையும் எதிா்பாா்த்தோம், கிடைக்கவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்க் கடன் தள்ளுபடியும் கிடைக்கவில்லை. தமிழக அரசைப் போன்று மத்திய அரசும் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையாவது ஏற்கப்பட வேண்டும். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது இதற்கான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என எதிா்பாா்க்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT