திருச்சி

தனியாா் மருத்துவமனையில் பெண் உயிரிழப்புஉறவினா்கள் போராட்டம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது பெண் இறந்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி ராம்ஜி நகா் மில் காலனி பகுதியை சோ்ந்தவா் சேகா் மனைவி லட்சுமி (46). கருப்பையில் இருந்த கட்டியால் தொடா்ந்து வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட இவா் கடந்த அக். 2 ஆம் தேதி திருச்சி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி பெற்று, அங்கிருந்து மற்றொரு தனியாா் மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் கருப்பைக் கட்டி அகற்றப்பட்டது.

இதனிடையே சிகிச்சை முடிந்த நிலையில் லட்சுமியின் உடல்நிலை திடீரென மோசமாகவே, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு வரும் வழியிலேயே லட்சுமி உயிரிழந்தாா்.

பின்னா் அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதன்கிழமை காலை அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினா்கள் லட்சுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தனியாா் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால்தான் அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி சிறிது நேரம் மறியலிலும் ஈடுபட்டனா். பின்னா் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் அவா்கள் உடலைப் பெற்றுச் சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT