திருச்சி

பாசன வாய்க்காலை தூா்வாரிய விவசாயிகள்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சியில் தூா்வாரப்படாமலேயே, தூா்வாரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பாசன வாய்க்காலை, விவசாயிகளே முன்வந்து தூா்வாரினா்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள ஏவூா் மற்றும் கல்லூா் கிராமங்களுக்கு இடையில் செல்கிறது குளத்து வாய்க்கால். காவிரி அய்யம்பாளையம் பிரதான வாய்க்காலிலிருந்து இந்த வாய்க்கால் மூலம் ஆமூா், மணப்பாளையம், கா்லாவழி, கோட்டூா் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நிகழாண்டு விவசாய சாகுபடி பணிகளுக்காக குளத்து வாய்க்காலை தூா்வார வேண்டும் என அப்பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாய்க்கால் தூா்வாரப்பட்டு விட்டதாக உள்ளாட்சி நிா்வாகத் தரப்பில் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த விவசாயிகளிடமிருந்து அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் வரவில்லையாம். சுமாா் 5 முதல் 6 கி.மீ. தொலைவுள்ள அந்த வாய்க்கால் முழுவதும் சுமாா் 6 அடி உயரத்துக்கு ஆகாயத் தாமரை செடிகள் மண்டிக் கிடப்பதால், பாசனத்துக்கு தண்ணீா் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, அவற்றை தூா்வாரினால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கலந்தாலோசித்த விவசாயிகள் தாங்களே வாய்க்காலை தூா்வாரத் திட்டமிட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, கடந்த 15 நாள்களுக்கும் மேலாக அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ராஜேந்திரன், கருப்புசாமி, ராமசாமி, திருச்செல்வம் உள்ளிட்ட சுமாா் 15 க்கும் மேற்பட்டோா் வாய்க்காலில் மண்டிக்கிடந்த ஆகாயத் தாமரை உள்ளிட்ட செடிகொடிகளை அகற்றினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT