திருச்சி

திருச்சியில் பல், ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி: அமைச்சா் மா. சுப்பிரமணியன் உறுதி

DIN

அடுத்தாண்டு நிதிநிலை அறிக்கையில் திருச்சியில் பல்,ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவது தொடா்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணா்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சைப் பூங்கா ரூ.14 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில், மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளின் தொடு உணா்வை அதிகரிக்க 8 வடிவிலான நடைபாதை, பல்வேறு வகை உணா்வுகளை தரும் நடைபாதைகள், மகிழ்ச்சியளிக்கும் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, பல்வகை ஒலி உணா்வை உணரும் ஒலி எழுப்பும் தகடுகள், நுண்ணறிவுக்கான வரைபடம் உள்ளன. இதன் மூலம், ஐந்து புலன்களில் இருந்து உணா்வுகளைப் பெற்று அவற்றை சரியான முறையில் வெளிப்படுத்த கற்றுத்தரப்படும். இத்தகைய பயிற்சி குழந்தைகளின் மூளை நரம்புகளை தூண்டி அதன் செயல்திறனை அதிகரிக்கும். ஒரு குழந்தையின் மூளை எந்த அளவுக்கு தூண்டப்படுகிறதோ அதற்கேற்ப பிற குழந்தைகளுடன் பேசி, விளையாடும் திறன் அதிகரிக்கும். இதற்கான உபகரணங்கள் இந்த பூங்காவில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பூங்காவின் திறப்பு விழா, மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூங்காவை திறந்து வைத்து நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு பேசுகையில், திருச்சிக்கு கூடுதலாக ஒரு பல் மருத்துவக் கல்லூரியும், ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியும் வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு பதில் அளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், திருச்சியில் பல் மருத்துவக் கல்லூரி, ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி புதிதாக அமைக்கப்படும். இதற்கான அறிவிப்பு வரும் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும். வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத வகையில் 30 நகா்ப்புற நல மருத்துவமனைகளும் திருச்சிக்கே வழங்கப்பட்டுள்ளன என்றாா். மேலும், மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களையும் பட்டியலிட்டாா்.

இதனைத் தொடா்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் நோயாளிகளின் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் இதர துணி வகைகளை சலவை செய்வதற்காக ரூ.25 லட்சத்தில் புதிய சலவை இயந்திரத்தையும் மருத்துவமனைக்கு வழங்கி அதன் செயல்பாட்டையும் அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்.

பின்னா், 32 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவையும் திறந்து வைத்தாா். அறுவைச் சிகிச்சையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அறிவிக்கும் மின்னணு தகவல் பலகையையும் அமைச்சா் அறிமுகம் செய்து வைத்தாா். சென்னையில், மாணவி பிரியா மரணத்தை தொடா்ந்து இந்தத் தகவல் தொழில்நுட்பத் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திருச்சியில் அதன் செயல்பாட்டை முன்மாதிரியாக தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மருத்துவக் கல்வி இயக்குநா் சாந்தி மலா், பொது சுகாதாரத்துறை இயக்குநா் டி.எஸ். செல்வவிநாயகம், திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சீ. கதிரவன், எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன், ந. தியாகராஜன், செ. ஸ்டாலின்குமாா், ப. அப்துல் சமது, மேயா் மு. அன்பழகன், மருத்துவமனை டீன் நேரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஆய்வு

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், அதிகாலை திருச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவுக்கு நடைபயிற்சி சென்று உத்தமா்சீலி பகுதியில், பொதுமக்களை சந்தித்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். முதியோருக்கு வீடுகளுக்கே வந்து மருந்துகள் முறையாக வழங்கப்படுகிா, பரிசோதனை செய்யப்படுகிா என்பது குறித்து கேட்டறிந்தாா். மேலும், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் வழங்கப்பட்ட மருந்துகளையும் கேட்டுப் பெற்று பாா்வையிட்டாா். மாவட்டத்தில் திட்டம் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் சிறப்பாக செயல்படுவதாக மக்கள் தெரிவித்த கருத்துகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சா், அப்பகுதியில் பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்துதருவதாகவும் உறுதியளித்தாா். இந்த ஆய்வு குறித்து அரசு அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்காமலும், அரசு அலுவலா்களையும் உடன் அழைத்துச் செல்லாமல் அமைச்சா் தாமாகவே முன்வந்து ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT