திருச்சி

திடக்கழிவுகள் ‘பயோமைனிங்’ திட்டம் மூலம் அகற்றப்படும்: அமைச்சா் கே.என். நேரு

6th Jul 2022 11:49 PM

ADVERTISEMENT

 

தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகள் ‘பயோமைனிங்’ திட்டம் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக அகற்றப்படும் என்றாா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு.

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளில் கிராவல் மண் அடிக்கும் பணி, மாநகராட்சி சாா்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் வழங்குதலைத் தொடங்கி வைத்த அமைச்சா் மேலும் கூறியது:

திருச்சி பஞ்சப்பூா் பகுதியில் சுமாா் 80 ஏக்கரில் அமைக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ள பல்வேறு பணிகளுக்குமான ஒப்பந்தங்கள் நடைபெறுகின்றன. அவை முடிவுக்கு வந்த அடுத்த 18 மாதங்களில் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

ADVERTISEMENT

மேலும் திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வந்த அரைவட்டச்சாலைப் பணிகளில் பஞ்சப்பூா் பகுதியில் பல்வேறு பிரச்னைகளால் கிடப்பில் உள்ள பணிகளை மீண்டும் தொடங்கவும் நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, வட்டச்சாலை பணிகளும் விரைவில் முடியவுள்ளன.

திருச்சி மாநகராட்சியில் புதைசாக்கடைப் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இன்னும் 15 நாள்களுக்குள் திருச்சி மாநகரில் 75 சத சாலைகள் புதிதாக அமைக்கப்படும். சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தம் முடிந்து, பணிகள் நடைபெறுகின்றன.

திடக்கழிவு மேலாண்மை: பெரிய அளவில் தூய்மைப் பணியாளா்களை வைத்து தூய்மைப் பணிகளை மேற்கொள்வதை காட்டிலும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி, குப்பைகளைத் தரம் பிரித்து மக்களே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் கருணாநிதி பிறந்த நாளில் மெகா தூய்மைப் பணி தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 7,200 டன் குப்பைகள் சேகரித்து அகற்றப்பட்டுள்ளன.

எனவே மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கியுள்ள திடக்கழிவுகள் (அதாவது இரும்பு, பிளாஸ்டிக், அழுகும் தன்மையுள்ள குப்பைகள்) அனைத்தும் பயோமைனிங் திட்ட முறையில் அகற்றப்படவுள்ளன. இதற்கு சுமாா் 2 ஆண்டுகள் வரை ஆகலாம்.

சென்னை பெருங்களத்தூரில் உள்ள குப்பைக் கிடங்கில் உள்ள திடக்கழிவுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அகற்றப்பட்டு, அங்கு சுமாா் 400 ஏக்கரில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பூங்கா அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

அது மட்டுமல்லாமல் சென்னையில் காய்கனிகள் உள்ளிட்ட மரக்கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிப்பது, மற்றும் இடிபொருள்களை (டெப்ரிஸ்) நவீன இயந்திரம் மூலம் அரைத்து மண்ணாக்கும் திட்டமும் மேற்கொள்ளப்படுகிறது.

இவை அனைத்தும் மாநிலம் முழுவதும் அனைத்து, மாநகராட்சி, நகராட்சிகளிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அதுபோல சுமாா் 50 ஆயிரம் மக்கள்தொகைக்கு அதிகமுள்ள உள்ளாட்சிப் பகுதிகளில் சேகரமாகும் அழுகும் தன்மையுள்ள பொருள்களிலிருந்து உரம் தயாரிப்பது உள்ளிட்ட திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதுபோல பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது மிகப்பெரிய சவாலான பணி. அதை மேற்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் 30 ஆண்டுகால பழக்கத்தை திடீரென கைவிட முடியாத சூழல் மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் உள்ளது. எனவே அதில் உள்ள பாதிப்புகளை விளக்கி, படிப்படியாக மாற்ற வேண்டிய நிலையும் அரசுக்கு உள்ளது.

சென்னையில் மீண்டும் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க ரூ. 938 கோடியில் நடைபெறும் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் தினமும் பாா்வையிட்டு வருகிறாா். தண்ணீா் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு மழைக்காலத்துக்கு முன்பே பணிகளை முடிக்க ஆவன செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ஆா். வைத்திநாதன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் வைரமணி, எம்எல்ஏக்கள் அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், கோட்டத் தலைவா்கள் விஜயலட்சுமி கண்ணன், துா்காதேவி, ஜெயநிா்மலா, ஆண்டாள் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT