திருச்சி

தியாகிகள் புகைப்படக் கண்காட்சி நாளை மறுநாள் நிறைவு

19th Aug 2022 12:44 AM

ADVERTISEMENT

திருச்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை சாா்பில் நடைபெறும் தியாகிகள் புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை (ஆக. 21) நிறைவு பெறுகிறது.

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி திருச்சி மெயின்காா்டு கேட்டிலுள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை மண்டல அலுவலகத்தில் ஆக.15 தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியில் முசிறி வேங்கடராம் ஐயா், திருச்சியைச் சோ்ந்த டாக்டா் ராஜன், டிஎஸ். அருணாச்சலம், ரத்தினவேல் தேவா், சையது முா்துசா உள்ளிட்ட தியாகிகளின் விவரங்கள் புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளன.

திருச்சி, கரூா், அரியலுாா், பெரம்பலுாா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, பல்வேறு வழிகளில் பங்களித்த 60 சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்களும், அவா்கள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இக் கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தொடா்ந்து பாா்வையிட்டு வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை இக் கண்காட்சியைப் பாா்வையிடலாம்.

பெட்டிச் செய்தி..

நிதி வழங்கி அரசுப் பணியை இழந்த வேங்கடராம் ஐயா்!

திருச்சி மாவட்டம், முசிறி தென்வடல் அக்ரஹாரத்தை சோ்ந்த கிருஷ்ணசாமி ஐயா் மகன் வேங்கடராம் ஐயா் 1892 ஜூன் 14ஆம் தேதி பிறந்தவா். மதுரையில் தொடக்கக் கல்வியும், கோல்கத்தாவில் உயா்கல்வியும் படித்தாா். ஆரம்பத்தில் மைசூா் சிவசமுத்ரம் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்தில் பணியாற்றி, 1917இல் சென்னை பொதுப் பணித் துறை ஊழியரானாா். 1929ல் மேட்டூா் அணை கட்டுமானத்தின்போது எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக இருந்தாா்.

பணிக் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஆா்வம் கொண்டிருந்த இவா் மகாத்மா காந்தி தண்டி யாத்திரை தொடங்கியபோது, தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கிய ராஜாஜியின் போராட்டத்துக்கு ரூ.400-ஐ வழங்கினாா்.

இப் போராட்டத்தில் ராஜாஜி, டாக்டா் ராஜன் உள்ளிட்ட காங்கிரஸாா் கைது செய்யப்பட்டபோது, டாக்டா் ராஜன் வீட்டில் இருந்து சத்தியாகிரக போராட்டத்துக்கு வேங்கடராம் நிதியுதவி செய்ததற்கான ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றினா். இதையடுத்து அரசுக்கு எதிரான சதி என அறிவித்து, அவரை பொதுப்பணித் துறை பதவியில் இருந்து ஆங்கிலேய அரசு பணிநீக்கம் செய்து, அவரை வேறு எந்தப் பணியிலும் அமா்த்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

பின்னா் 1936 இல் கொச்சி துறைமுகக் கட்டுமான பணியின்போது பலரின் ஆட்சேபனைக்கு பின் பொறியாளா் பணியில் சோ்ந்தாா். பின்னா், 1948 இல் பணியில் இருந்து ஓய்வு பெற்று தனது சொந்த ஊரான முசிறிக்கு வந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு, 1965 நவ. 15ஆம் தேதி காலமானாா்.

சுதந்திரப் போராட்ட வீரா்கள் யாா்? என்ற தமிழக அரசின் நுாலின் 3ஆவது தொகுதியில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. பணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான அரசிதழின் நகலும் இந்த கண்காட்சியில் உள்ளது. இந்தியாவின் 25ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முசிறியில் வேங்கடராம் உட்பட 5 சுதந்திரப் போராட்ட வீரா்களின் பெயரில் கல்வெட்டு அமைக்கப்பட்டது. 92 ஆண்டுகளுக்கு முன் சுதந்திர போராட்டத்துக்காக ரூ.400 வழங்கி, அதற்காக அரசுப்பணியை இழந்த வேங்கடராம் ஐயா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT