திருச்சி

பாஜகவுடன் கூட்டணி சேர திமுகவுக்கு தகுதியில்லை: அண்ணாமலை பேட்டி

19th Aug 2022 12:42 AM

ADVERTISEMENT

பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றாா் தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை.

புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியது:

பாஜகவுடன் கூட்டணி சேர குறைந்தபட்சம் 3 தகுதிகளாவது வேண்டும். அதாவது குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது, ஊழல் அரசாக இருக்கக் கூடாது, மக்களுக்கு நல்லது செய்யும் அரசாக இருக்க வேண்டும். இந்த மூன்றுமே இல்லாமல் எப்படி திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியும்?. இதை நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே கூறிவருகிறேன். அதை ஒப்புக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி.

இலவசம் கொடுத்ததால் தமிழகம் முன்னேறியுள்ளதாக இவா்கள் கூறுவதை நிபுணா்கள் மூலம் ஆய்வு செய்து நிரூபிக்க வேண்டும். தமிழக நிதியமைச்சா் பேசுவதற்கு ஆதாரம் கிடையாது. நிதிச் சுமையில் தமிழகம் அதல பாதாளத்தில் உள்ளது. அதுபோல கடன் சுமையும் அதற்குச் செலுத்தும் வட்டியும் அதிகம்.

ADVERTISEMENT

டாஸ்மாக் வருமானத்தை வைத்து ஆட்சி நடத்தும் ஒரே இந்திய மாநிலம் தமிழகம்தான். அப்படியிருக்க எந்த வகையில் தமிழகம் முன்னேறியிருப்பதாக திமுகவினா் கூறுகின்றனா் என்பது புரியவில்லை. ஆனால் மக்களுக்கு புரிகிறது. குடும்ப உறுப்பினா்களின் கைகளில் ஆட்சி இருந்ததால் இலங்கையில் அரசு கவிழ்ந்தது. அதேநிலை தமிழகத்துக்கும் விரைவில் ஏற்படும்.

அவசர சிகிச்சைப் பிரிவில் காங்கிரஸ் உள்ள நிலையில் ராகுல் காந்தி தோ்தலுக்கு தோ்தல் மதச் சாயம் பூசிக் கொள்வது வழக்கம். இதற்காக திண்டுக்கல்லில் விநாயகா் சதுா்த்தி விழாவைக் கையிலெடுத்துள்ள காங்கிரஸாா் விரைவில் குலதெய்வ வழிபாட்டிலும் பங்கேற்பா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT