திருச்சி

மத்திய அரசு குறித்து திமுக கூட்டணி அவதூறு பரப்புகிறது

14th Apr 2022 01:46 AM

ADVERTISEMENT

மத்திய அரசு குறித்து தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடா்ந்து அவதூறு பரப்பி வருகின்றன என்றாா் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நயினாா் நாகேந்திரன்.

கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பை குறைப்பதற்கும், மக்களுக்கு உதவுவதற்காகவும் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் செயல்பாடுகளை திருச்சி வரகனேரி கல்பாளையத்திலுள்ள நியாயவிலைக் கடையில் புதன்கிழமை பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு அரிசி வழங்குதலைத் தொடக்கி வைத்து, அவா் மேலும் கூறியது:

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமாா் 79.39 கோடி பயனாளிகளுக்கு மாதத்துக்கு கூடுதலாக ஒருவருக்கு 5

ADVERTISEMENT

கிலோ உணவுத் தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். இதற்கான செலவை மத்திய அரசே ஏற்கிறது.

தமிழக மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடா்ந்து மத்திய அரசு குறித்து திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனா்.

சட்டப் பேரவையில் கருத்து தெரிவிக்க அனைத்து உறுப்பினா்களுக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. காங்கிரஸ் கட்சி தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தமிழகத்தில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கில்லை.

தமிழகத்தில் மட்டுமே ஹிந்தியை திணிப்பதில் மத்திய பாஜக அரசு முயற்சிக்கவில்லை. விருப்பமிருந்தால் ஹிந்தியை கற்றுக் கொள்ளலாம் என்றே கூறுகிறோம். தமிழக மக்கள் நலனுக்காக மத்திய அரசு தொடந்து தனது பணியை செயல்படுத்தும் என்றாா் அவா்.

நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவா் ராஜசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவா் பாா்த்திபன், நிா்வாகிகள் இல. கண்ணன், மல்லி செல்வராஜ், சதீஷ்குமாா், அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT