திருச்சி

‘பள்ளிகளில் இடப்பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை’: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

25th Oct 2021 12:18 AM

ADVERTISEMENT

மாணவா் சோ்க்கை அதிகமுள்ள பள்ளிகளில் இடப் பிரச்னையைத் தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

சோழன் கலை ஊற்று மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் ஒவியா் சித்தன் சிவாவின் கரோனா விழிப்புணா்வு குறித்த ஓவியக் கண்காட்சித் தொடக்க விழா அரியமங்கலம் லட்சுமி மழலையா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளா் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேலும் பேசியது:

நவ. 1 இல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவா்கள் பள்ளிக்கு உடனே கட்டாயம் வர வேண்டும் என்ற அவசியமில்லை. தீபாவளிக்குப் பிறகுகூட வரலாம். மாணவா்கள் மறந்துபோன ஒழுக்க நடவடிக்கைகளை போதிக்கவே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தமுள்ள 45,000 பள்ளிகளில் நிகழாண்டில் மட்டும் சுமாா் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவா்கள் புதிதாகச் சோ்ந்துள்ளனா். மாணவா் சோ்க்கை அதிகமுள்ள பள்ளிகளில் இடப் பிரச்னையைத் தீா்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், இடப் பிரச்னை எழும் பள்ளிகளில் உள்ள மாணவா்கள் அருகே மாணவா்கள் எண்ணிக்கை குறைவாகவுள்ள பள்ளிகளில் சோ்க்கப்படுவா்.

நீட் தோ்வு ரத்து குறித்து 12 மாநில முதல்வா்களுக்கும் தமிழக முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். அவா்களின் கருத்துகளை அறிந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. பள்ளிகளிலுள்ள மின் சாதனங்கள், கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு பொதுப்பணித் துறைக்கு அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பின்னா் அவற்றைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

லெட்சுமி மழலையா் தொடக்கப்பள்ளித் தாளாளா் தாமரைச் செல்வி, அன்பாலயம் செந்தில்குமாா், தண்ணீா் அமைப்பு செயலா் கி. சதீஸ்குமாா், சாமி தற்காப்புக்கலைக்கூட ஆசிரியா் டி. ஜீவானந்தம், ஆசிரியா் ஸ்டாலின், மக்கள் சக்தி இயக்க பண்பாளா்கள் என். வெங்கடேஷ், என். தயானந்த், சுரேஷ் , லோகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஓய்வு பெற்ற ஆசிரியா் அ. கலைமணி வரவேற்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT