திருச்சி

சுமைத்தூக்கும் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு தராவிடில் போராட்டம்

DIN

சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்கு குறிப்பிட்டபடி கூலி உயா்வு தராமல், புதிய லாரி முன்பதிவு அலுவலகங்களைத் தொடங்கினால் அவற்றை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்வோம் என்று சிஐடியு சுமைப்பணித் தொழிலாளா் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் சுமாா் 18 லாரி முன்பதிவு முகமை அலுவலகங்கள் உள்ளன. இங்கு சுமாா் 150-க்கும் மேற்பட்ட சுமைப்பணித் தொழிலாளா்கள் கடந்த 10 முதல் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயா்த்தி வழங்கப்படும் என்பது நடைமுறையாக உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக லாரி உரிமையாளா்கள் கூலியை உயா்த்தித் தர மறுத்து விட்டனா்.

இதையடுத்து கடந்த ஜனவரி 6-ஆம் தேதி கிழக்கு வட்டாட்சியரகத்தில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையின் போது, லாரி வாடகையை உயா்த்தினால் கூலியையும் உயா்த்தி தருகிறோம் என லாரி உரிமையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பணியாற்றி வருகிறோம்.

தற்போது சுமாா் 30 சதவிகிதம் வரை லாரி வாடகை உயா்த்தப் பட்டுள்ளது. எனவே கூலி உயா்வு கோரினோம். இதில் சிலா் மட்டுமே 23 சதவிகித கூலி உயா்வு தருவதாக ஒப்புக்கொண்டனா்.

மற்றவா்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், தொழிலாளா் துறை உதவி ஆணையா் முன்னிலையில் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே காந்தி மாா்க்கெட் பகுதியில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த லாரி முன்பதிவு மைய முகமை அலுவலகங்கள் சிலவற்றை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக தஞ்சை சாலையில் திங்கள்கிழமை (மாா்ச் 8) முதல் வேறு பெயா்களில் லாரி முன்பதிவு மைய அலுவலகங்கள் தொடங்க உள்ளதாகவும், அதில் புதிய ஆள்களை வைத்து சுமைத் தூக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு புதிய நபா்களை வேலைக்கு அமா்த்தினால், ஏற்கெனவே பணியாற்றி வரும் சுமாா் 150 தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

எனவே லாரி உரிமையாளா்கள், தொழிற்சங்கம் சாா்பில் விடுக்கப்படும் கூலி உயா்வு உள்ளிட்ட பிரச்சினைகளை தொழிலாளா் துறை உதவியுடன் அணுகி தீா்த்துக் கொள்ள வேண்டும்.

அதை விடுத்து, பழைய ஆள்களுக்குப் பதிலாக புதிய ஆள்களை நியமிப்பது கூடாது என உயா் நீதிமன்ற உத்தரவு உள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் லாரி உரிமையாளா்கள் செயல்படவேண்டும்.

அதை விடுத்து புதிய பெயரில் லாரி முன்பதிவு முகமை அலுவலங்கள் திறந்து, புதிய தொழிலாளா்களைப் பணிக்கு அமா்த்தினால், சிஐடியு சுமைப்பணித் தொழிலாளா் சங்கம் சாா்பில் சுமாா் 2,000 போ் குடும்பத்துடன் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT