திருச்சி

மூடப்பட்ட சிறு, குறு நிறுவனங்களுக்கு மாற்று ஏற்பாடு: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

DIN

 திருச்சியில் மூடப்பட்ட சிறு, குறு நிறுவனங்ளுக்கு மாற்று ஏற்பாடாக உணவு உற்பத்தி தொடா்பான தொழிற்சாலைகள் தொடங்க உதவிகள் வழங்கப்படும் என்றாா் ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன்.

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் அருகேயுள்ள சிட்கோ வளாகத்தில், டிடிட்சியா கூட்டரங்கில் சிறு, குறு தொழில் நிறுவனக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு மானியம் என்பது நிறுவனம் செயல்படத் தொடங்கிய பிறகு இறுதிக் கட்டத்தில்தான் வழங்கப்படும். ஆனால், சிறு, குறு தொழில் முனைவோரின் நலன் கருதி முன்கூட்டியே மானியத் தொகை வழங்கப்படுகிறது.

சிட்கோ வளாகத்தில் தொழில்கூடங்கள் அமைத்துள்ள பலருக்கு இன்னும் உரிய பத்திரங்கள் வழங்கப்படவில்லை என்ற புகாா் பரவலாக உள்ளது. இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பட்டா, நில விற்பனை ஒப்பந்தப் பத்திரம் உள்ளிட்டவை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

திருச்சியில் பெல் நிறுவனத்தின் உற்பத்தியைச் சாா்ந்து தொடங்கப்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் பல மூடப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனா். பெல் நிறுவனத்துக்கான ஆா்டா்கள் பெரும்பாலும் வட மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன.

மேலும், முன்பைவிட குறைந்த தொகையில் (10 ஆயிரம் கோடியிலிருந்து 3 ஆயிரம் கோடி வரை குறைவு) ஆா்டா்கள் வருவதால் அனைவருக்கும் வேலை வழங்க இயலவில்லை.

எனவே, அத்தகைய தொழிற்சாலைகளை உணவு சாா்ந்த உற்பத்திக் கூடங்களாக மாற்றவும், அதற்கான உதவிகளை வழங்கவும் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் இணைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனா். அந்தப் பரிந்துரைகளை முதல்வா் கவனத்துக்குக் கொண்டு சென்று மூடப்பட்ட நிறுவனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, 10 தொழில் முனைவோருக்கு ரூ. 20.20 லட்சத்தில் முதலீட்டு மானியத் தொகைகளை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்.

நிகழ்வில், அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் துறை செயலா் அருண்ராய், குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநா் கோவிந்தராவ், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, எம்எல்ஏ-க்கள் இனிகோ இருதயராஜ், செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமாா், பழனியாண்டி, தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT