திருச்சி

காவிரியின் பழைய பாலத்தில் விரிசல்கள்: சாக்குப் போட்டி நடத்தி இளைஞர்கள் போராட்டம்

21st Sep 2020 12:31 PM

ADVERTISEMENT

காவிரியின் பழைய பாலத்தில் ஏற்பட்ட விரிசல்களை சீரமைக்க கோரி திருச்சியில் இளைஞர்கள் சாக்கு போட்டி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி ஓடத்துறை முதல் மாம்பழச்சாலையை இணைக்கும் வகையில் 1976 ஆம் ஆண்டு 1.25 கோடி ரூபாய் செலவில் 15 மீட்டர் அகலத்தில் 541.46 மீட்டர் நீளத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு அப்போதைய மத்திய உள்ளாட்சி துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டி மற்றும் தமிழக ஆளுநர் ஆலோசகர் சுப்ரமணியம் ஆகியோரால் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பாலம் பழுதடைந்த காரணத்தால் கடந்த 2016ஆம் ஆண்டு 1.70கோடி ரூபாய் மதிப்பில் பாலம் சீரமைக்கப்பட்டது. 

அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இருந்தபோதும் பணிகள் நிறைவடைந்த நிலையில் பாலத்தின் சாலைகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தினந்தோறும் விபத்துகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியும், தரமற்ற சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட  தலைவர் சுரேஷ் தலைமையில் இளைஞர்கள் அந்த பாலத்தில் சாக்குப் போட்டி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். உறுதியளித்தப்படி பாலத்தை சீரமைக்கவில்லையென்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

பாலத்தில் அதிர்வை குறைக்கும் வகையில் பேரிங் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பேரிங் பழையதாகி விட்டதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்லும் காரணத்தால் சாலைகளில் உள்ள இணைப்புகளில் விரிசல்கள் ஏற்படுகிறது. விரைவில் அந்த பேரிங்கை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் வீரமணி தெரிவித்தார்.
 

Tags : trichy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT