திருச்சி

பாஜகவின் வேல் யாத்திரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: கே.எஸ். அழகிரி

31st Oct 2020 11:16 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 

திருச்சியில் இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று பின்னர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருச்சி புறநகர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்பதற்காக செல்வதற்கு முன்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியது: தமிழகத்தின் வாள் யாத்திரையும், வேல் யாத்திரையும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. கடவுள் யார் கையில் இருக்கிறார் என்பதுதான் முக்கியம். முருகனின் வேல் எங்களுடைய கையில் இருக்கும் போது மக்கள் பாதுகாப்பாக இருப்பர். பாஜகவின் கையில் இருக்கும் போது ரத்தம் சிந்த கூடியதாக மாறும். தமிழகம் மதச்சார்பற்ற ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட அற்புதமான மண். 

இந்த மண்ணில் வேற்றுமை ஏற்படுத்த முடியாது. மிஸ்டு கால் மூலம் 80 லட்சம் உறுப்பினர்களை பாஜக சேர்த்தது போன்று தற்போது வேண்டுமானால் ஏதும் நிகழலாம். ஸ்டாலின் தன்னுடைய மண்ணில் இருக்கிறார். தன்னுடைய மக்களுக்காக வாழ்கிறார். 50 ஆண்டுகள் அவரது கட்சி அரசியலில் உள்ளது. அவரை கோ பேக் என்று சொல்வது முடியாதது. தென் இந்தியாவையும் மக்களையும் ஏற்றுக் கொள்ளாததால் தான் மோடியை கோபேக் மோடி என்று தெரிவித்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதியரசர் கலையரசன் தெரிவித்திருந்தார், மாநில அரசு 7.5% ஆக மாற்றியது. சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியும் 45 நாட்களாக அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.  

ஆளுநர் ஒப்புக் கொள்ளாவிட்டால் சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் இயற்றி அதனை சட்டமாக்கலாம் இதனை அதிமுக அரசு ஒப்புக் கொள்ளவில்லை.  ஆளுநருக்கு கடிதம் கூட எழுதவில்லை. புதுச்சேரி அரசு 10% அரசு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு அதனை பின்பற்றி அதிமுக அரசு செய்துள்ளது. அதன் பின்னர் ஆளுநர் அழுத்தம் தாங்காமல் ஒப்புதல் அளித்துள்ளார். இது அதிமுகவிற்கும் ஆளுநருக்கும், பாஜகவிற்கு சம்பந்தமில்லை. எதிர்க்கட்சிகளின் வெற்றி. ரஜினி 20 ஆண்டுகளாக கட்சி ஆரம்பிப்பதாக கூறி வருகிறார். அவர் எப்போது கட்சி ஆரம்பிக்கிறார் என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவரிடமே கேட்போம். 

ADVERTISEMENT

காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்கிறார்களா, பாஜக கூட்டணியை ஆதரிக்கிறார்களா என்ற மக்களின் மனநிலை கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாஜக-அதிமுக பின்தங்கிய நிலையில் உள்ளது. காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அதிமுக வைத்து பாஜக ஏற்கனவே காலூன்ற முயன்று நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை கூட்டு சேர்த்ததால் அதிமுகவின் கால்கள் உடைந்தது. அதிமுகவிற்கு கால் இல்லாத நிலையில் பாஜகவை காலூன்ற வைப்பது இயலாது.  பாஜகவில் இணையும் நட்சத்திரங்கள் ஒளியிழந்த நட்சத்திரங்கள். நட்சத்திரங்கள் எப்போதும் ஒளியோடு இருப்பதில்லை என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஒளி இழந்த நட்சத்திரங்கள் ஜொலிக்க முடியாது என்று தெரிவித்தார்.

Tags : congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT