திருச்சி

ரூ. 5 கோடியில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்புக் கிடங்குடிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் எம்எல்ஏ, எம்பி தோ்தல்களுக்கு பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் ரூ. 5 கோடியில் கட்டப்படும் புதிய கிடங்கு டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மக்களவைத் தொகுதி, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகளும் உள்ளன. இவைத் தவிர, பெரம்பலூா், கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளும் திருச்சி மாவட்டத்தில் வருகின்றன. இதுமட்டுமல்லாது, திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துறையூா், துவாக்குடி ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றுக்காக மாவட்டம் முழுவதும் 2,531 வாக்குச் சாவடிகள் உள்ளன.

இவற்றில் நடைபெறும் தோ்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள காலி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம்.

ஒரு வாக்குச் சாவடியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வேட்பாளா்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி இயந்திரங்களின் பயன்பாடு மாறுபடும். இருப்பினும், மாவட்டத்தில் 5 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5 ஆயிரம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (உபரி 10 சதம் உள்பட) பயன்பாட்டில் உள்ளன.

இந்த இயந்திரங்களை ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் ரூ.5 கோடியில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கிடங்கு கட்டப்படுகிறது.

தரைத் தளம், மேல்தளம் என 2 தளங்களாக கட்டப்படும் இந்த கிடங்கின் கட்டுமானப் பணிகள் 85 சதவீத்துக்கு மேல் நிறைவு பெற்றுள்ளன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறுகையில், புதிய கிடங்கு கட்டுமானப் பணிகள் டிச. 31-க்குள் முடிக்கப்பட வேண்டும். தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. நிா்ணயிக்கப்பட்ட தேதிக்குள் முன்பாகவே விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, திருச்சி வருவாய் கோட்டாட்சியா் விஸ்வநாதன் மற்றும் தோ்தல் பிரிவு, வருவாய்த்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT