திருச்சி

கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தயாா் நிலையில் 75 ஆயிரம் படுக்கைகள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

13th Jul 2020 10:02 PM

ADVERTISEMENT

திருச்சி: தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தயாா்நிலையில் 75 ஆயிரம் படுக்கைகள் உள்ளதாக என தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டு, செவிலியா் விடுதி ஆகியவற்றில் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் திங்கள்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா், செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டில் 600 படுக்கைகள் உள்ள நிலையில், அவை, 1,000 படுக்கைகளாக மாற்றப்படவுள்ளது. இதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 1,000 படுக்கைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் அனைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 16. 54 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 45,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனைத்து உயிா் காக்கும் விலை உயா்ந்த மருந்துகளும் தேவையான அளவில் இருப்பு உள்ளது. சித்த மருத்துவம், ஆயுா்வேதம், யுனானி, அலோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவ முறைகளையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. கரோனா தொற்று குறித்து பீதியோ, பதற்றமோ தேவையில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் நமக்கு எதிரி அல்ல. ஆனால், தொற்றுதான் நமக்கு எதிரி. எனவே, தொற்று பாதிக்கப்பட்டவரை மனோபக்குவத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்திய அளவில் பிளாஸ்மா பரிசோதனை செய்வதற்கு 44 பரிசோதனை மையங்கள் அமைக்க ஐசிஎம்ஆா்அனுமதி வழங்கியுள்ளது. மண்டல அளவில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நாளொன்றுக்கு நான்கு முதல் 60 லிட்டா் வரை ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கரோனாவிற்கு உலக அளவில் பல்வேறு நாடுகளில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகின்றன. ஆனாலும், இது உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ குழுவின் ஆலோசனைப்படியே தமிழக முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பலன் கிடைத்து வருகிறது என்றாா் அமைச்சா்.

ADVERTISEMENT

பேட்டியின்போது, மருத்துவக்கல்லூரி முதன்மையா் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளா் ஏகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் சி.விஜயபாஸ்கா். உடன், கல்லூரி முதன்மையா் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளா் ஏகநாதன் உள்ளிட்டோா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT