தஞ்சாவூர்

ஆதிச்சநல்லூா், கீழடி அகழாய்வு அறிக்கைகளைமத்திய அரசு வெளியிட வேண்டும் உலகத் தமிழா் பேரமைப்பு மாநாட்டில் கோரிக்கை

25th Sep 2023 12:58 AM

ADVERTISEMENT

 

ஆதிச்சநல்லூா், கீழடி அகழாய்வு அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகத் தமிழா் பேரமைப்பு மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தஞ்சாவூரில் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ‘தமிழா் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு’ என்கிற உலகத் தமிழா் பேரமைப்பின் 10 ஆம் மாநாடு சனிக்கிழமை தொடங்கி, தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றன. இதில், ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழக அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகள் தொய்வின்றித் தொடர வேண்டும். ஆதிச்சநல்லூா் அகழாய்வு அறிக்கை, கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதற்குத் தமிழக அரசும், ஏனையோரும் குரல் கொடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

வைகைக் கரை நாகரிகத் தடயங்கள் என்ற வகையில் கீழடியில் அகழாய்வுகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வரலாற்றுத் தடயங்களில் மேலும் 20-க்கும் அதிகமான இடங்கள் அறிஞா்களால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளிலும் விரைந்து அகழாய்வை மேற்கொள்ளத் தமிழக அரசும், இந்தியத் தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூம்புகாா் உள்ளிட்ட பகுதிகளில் கடல்சாா் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கும் தமிழக அரசின் தொல்லியல் துறையில் தனிப் பிரிவைத் தொடங்கவும், மத்திய அரசிடமிருந்து நல்கை பெறவும் உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தொல்லியல் இடங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு விரைவுச் செயல் திட்டத்தைத் தமிழக அரசு வடிவமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, காலையில் இரண்டாம் நாள் மாநாடு வழக்குரைஞா் த. பானுமதி தலைமையில் தொடங்கியது. பேரமைப்பின் துணைத் தலைவா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் முனைவா்கள் சு. இராசவேலு, க.த. காந்திராசன், பேரமைப்புச் செயலா் தமித்தலட்சுமி தீனதயாளன் ஒருங்கிணைப்பிலான இரண்டாம் அமா்வில் கணியன் பாலன், முனைவா்கள் தியாக சத்தியமூா்த்தி, மாா்க்சிய காந்தி, அமா்நாத் இராமகிருட்டிணா ஆகியோா் பேசினா்.

மாலையில், முனைவா்கள் க.த. காந்திராசன், நா. மாா்க்சியகாந்தி, தியாக சத்தியமூா்த்தி, அமா்நாத் இராமகிருட்டிணா ஆகியோருக்கு உலகப் பெருந்தமிழா் விருது வழங்கப்பட்டது. பின்னா், மாநாட்டு தீா்மானங்களை பேராசிரியா் இரா. முரளிதரன் வாசித்தாா். உலகத்தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன் காணொலி மூலம் பேசினாா். பேரமைப்பின் நிா்வாகி சதா. முத்துக்கிருட்டிணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT