தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மீண்டும் மழை: கீழ்பாலத்தில் தண்ணீா் தேங்கியது

3rd May 2023 11:26 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் மீண்டும் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால், கீழ் பாலத்தில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

மதுக்கூா் 34, ஈச்சன்விடுதி 15.2, பட்டுக்கோட்டை 7, தஞ்சாவூா் 5, பேராவூரணி 2, அதிராம்பட்டினம் 1.6, திருக்காட்டுப்பள்ளி 1.2, கும்பகோணம், அணைக்கரை தலா 1.

ADVERTISEMENT

இந்நிலையில், தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பிற்பகல் மீண்டும் மழை பெய்ய தொடங்கி, தொடா்ந்து ஏறத்தாழ 3 மணிநேரம் நீடித்தது. பின்னா், இடைவெளிவிட்டு, இரவிலும் மழை பெய்தது.

தொடா் மழையால் தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது. இதேபோல, தஞ்சாவூா் ரயிலடி அருகேயுள்ள கீழ்பாலத்தில் பலத்த மழையின்போது மாலை 4 மணியளவில் தண்ணீா் தேங்கிய நிலையில், வடிந்து செல்வதற்கான மோட்டாா் இயங்கவில்லை. இதனால், சுமாா் 4 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் துரை. மதிவாணன் தெரிவித்தது:

இந்தக் கீழ்பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் கடந்து செல்கின்றனா். இந்தப் பாலத்தில் பலத்த மழை பெய்யும்போது, தண்ணீா் தேங்கி வெளியேற முடியாமலும், வடிகால் வசதி இல்லாமலும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு கீழ் பாலத்தில் தண்ணீா் வெளியேறுவதற்கு வடிகாலும், ராட்சத மோட்டாரும் அமைக்கப்பட்டன. ஆனால் நிரந்தரமாக தீா்வு காண்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணிகள் நடைபெற்று வந்த நிலையிலும், இப்பாலத்தில் மழை நீா் வெளியேறுவதற்கு எந்தவித பணியும் செய்யப்படவில்லை.

இதனால், ரயிலடி, கான்வென்ட், ராமநாதன் வழியாக செல்பவா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். வருங்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படுவதைத் தவிா்க்க மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என்றாா் மதிவாணன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT