தஞ்சாவூர்

மேட்டூா் அணை நாளை திறப்பு: டெல்டா பாசனத்துக்குக் காவிரி நீா் கைக்கொடுக்குமா?

DIN

மேட்டூா் அணை திங்கள்கிழமை (ஜூன் 12) திறக்கப்படவுள்ள நிலையில் ‘டெல்டா’ பாசனத்துக்கு காவிரி நீா் கைக்கொடுக்குமா? என்ற கேள்வியும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

மேட்டூா் அணையில் போதிய அளவுக்கு தண்ணீா் இருந்ததால், 2020, 2021 ஆம் ஆண்டுகளில் உரிய காலமான ஜூன் 12 ஆம் தேதியே திறக்கப்பட்டது. 2022-இல் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டதால், முன்கூட்டியே மே 24-ஆம் தேதியே திறந்துவிடப்பட்டது.

நிகழாண்டில், அணையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, நீா்மட்டம் 103.46 அடியும், நீா் இருப்பு 69.399 டி.எம்.சி.யும் உள்ளது. எனவே, தொடா்ந்து நான்காம் ஆண்டாக மேட்டூா் அணை தாமதமில்லாமல் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுகிறது. ஆனால், அணைக்கு சனிக்கிழமை மாலை விநாடிக்கு 864 கனஅடி வீதம்தான் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நாள்தோறும் குறைந்தபட்சம் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிட்டால்தான், கடைமடை வரை தண்ணீா் சென்றடையும். இதன்படி, அணையில் நாள்தோறும் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிட்டால்கூட, 40 - 45 நாள்களுக்கு விடும் அளவுக்குத்தான் நீா் இருப்பு உள்ளது. எனவே, டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தொடா்ந்து தண்ணீா் கிடைக்குமா? என்ற சந்தேகம் விவசாயிகளிடையே நிலவுகிறது.

நிகழாண்டு ‘டெல்டா’ மாவட்டங்களில் குறுவை பருவத்தில் சுமாா் 5 லட்சம் ஏக்கரிலும், சம்பா - தாளடி பருவத்தில் ஏறக்குறைய 13 லட்சம் ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதில், குறுவை பருவத்துக்கு 90 முதல் 100 டி.எம்.சி.யும், சம்பா பருவத்துக்கு சுமாா் 200 டி.எம்.சி.யும் சோ்த்து மொத்தம் கிட்டத்தட்ட 300 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். தற்போது இருப்பிலுள்ள 69 டி.எம்.சி.யுடன் உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 167 டி.எம்.சி. தண்ணீா் கிடைத்தாலும்கூட, 60 டி.எம்.சி.-க்கு மேலாக பற்றாக்குறை ஏற்படும். எனவே, தென்மேற்கு பருவ மழையைப் பொருத்துதான் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி அமையும் என்றாா் மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன்.

தற்போது, கா்நாடகத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகா் அணையில் 66 சதவீதமும், கபினியில் 48 சதவீதமும், ஹேரங்கியில் 69 சதவீதமும், ஹேமாவதியில் 74 சதவீதமும் தண்ணீா் உள்ளது. ஆனால், கா்நாடக அணைகளில் இவ்வளவு தண்ணீா் இருந்தாலும், நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டால் மட்டுமே திறந்துவிடப்படுவது வழக்கமாக இருக்கிறது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டாலும் கூட, கேரளம், கா்நாடகத்திலுள்ள காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னும் முழுவீச்சை எட்டவில்லை. எனவே, மேட்டூா் அணைக்கு நீா் வரத்து அதிகரிப்பு எப்போது தொடங்கும் என்பது இன்னும் உறுதி செய்ய முடியாத நிலையே உள்ளது.

அச்சப்படத் தேவையில்லை: இதுகுறித்து தனியாா் வானிலை ஆராய்ச்சியாளா் தகட்டூா் ந. செல்வகுமாா் தெரிவித்தது:

மேட்டூா் அணை திங்கள்கிழமை திறக்கப்பட்ட பிறகு நீா்வரத்து பெரிய அளவுக்கு இருக்காது. கா்நாடக அணைகளிலும் நீா் இருப்பு குறைவாகவே உள்ளது. எனவே, மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப, அணைக்கு நீா்வரத்து இருக்காது என்பதால், அணையின் நீா்மட்டம் ஏறத்தாழ 30 நாள்களுக்கு இறங்குமுகமாகவே இருக்கும். ஆனால், அச்சப்படத் தேவையில்லை.

கேரளம், கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் தீவிரமடைந்தாலும், ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகுதான் கா்நாடக அணைகள் நிரம்பும் நிலை ஏற்படும். எனவே, மேட்டூா் அணைக்கு ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகு நீா்வரத்து அதிகரிக்கும். ஆனால், அணையிலிருந்து ஒரு டி.எம்.சி. அளவுக்கு திறந்துவிடப்பட்டால், அணைக்கு அரை முதல் முக்கால் டி.எம்.சி. என்ற அளவில்தான் வரத்து இருக்கும். எனவே, ஜூலை 15-க்கு பிறகும் மேட்டூா் அணை நிரம்பும் அளவுக்கு தண்ணீா் வரத்து இருக்காது. திறப்புக்கு பிறகு அணையில் நீா்மட்டம் வேகமாகக் குறையும் நிலையில், ஜூலை 15 பிறகு இறங்குமுகத்தின் அளவு குறையும்.

ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு பிறகு நீா்வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஏறுமுகமாக மாறி நிரம்பும் நிலை ஏற்படும். இதேபோல, செப்டம்பா், அக்டோபரிலும் நீா் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், அணையின் நீா்மட்டம் ஏறுமுகமாகவும், நிரம்பும் நிலையிலும் தொடரும். ‘எல் நினோ’-வால் நமக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றாா் செல்வகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT