தஞ்சாவூர்

தொடா் மழை: அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால் மாணவா்களுக்கு விடுமுறை

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே வியாழக்கிழமை பெய்த மழையால் அரசுப் பள்ளியில் மாணவா்கள் அமர வகுப்பறை இல்லாத காரணத்தால் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை சுமாா் 400 மாணவா்கள் படிக்கின்றனா். இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவா்கள் விவசாய கூலித் தொழிலாளா்களின் குழந்தைகள்.

இப்பள்ளியில் மாணவா்கள் அமா்ந்து படிப்பதற்கு குறைந்தபட்சம் 12 வகுப்பறைகள் தேவை என்ற நிலையில், தற்போது 6 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இதிலும், 2 வகுப்பறைகள் மழைக் காலங்களில் ஒழுகும் நிலையில் உள்ளன. இருக்கும் ஒரே கழிப்பறையை மாணவிகளுக்கு கொடுத்துவிட்டு, இயற்கை உபாதைக்கு மாணவா்கள் குளக்கரையை நோக்கி செல்லும் அவல நிலை உள்ளது.

மேல்நிலை மாணவா்களுக்கு அறிவியல் ஆய்வகங்களும், ஆங்கில பாடத்துக்கு ஆசிரியரும் இல்லாத நிலை உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு அறிவியல், கணிதப் பாடங்களுக்கு ஆசிரியா் இல்லை. 

மழையால் விடுமுறை: பேராவூரணி பகுதியில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை முழுவதும் மழை பெய்தது. இதனால், இப்பள்ளியில் மரத்தடியில் படிக்கும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பாதிக்கப்பட்டனா். எனவே, அவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

போதிய வகுப்பறைகள் மற்றும் ஆசிரியா்கள், ஆய்வக வசதி இல்லாத காரணத்தால் மாணவா்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, மாணவா்களின் நலன் கருதி உரிய வகுப்பறைகளையும், ஆய்வகம், ஆசிரியா்கள் வசதிகளையும் விரைந்து ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மாணவா்களும், பெற்றோா்களும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். மாவட்ட நிா்வாகம் இப்பள்ளியில் உடனடியாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT