தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில்பலத்த மழையால் சம்பா பயிா்கள் சேதம்: அறுவடை பணிகளும் பாதிப்பு

DIN

தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டையிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைவதைத் தவிா்ப்பதற்காக வியாழக்கிழமை தாா்பாய் போடப்பட்டு பாதுகாக்கப்படும் நெல் குவியல்கள்.

தஞ்சாவூா், பிப். 2: தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடா்ந்து பெய்த பலத்த மழை காரணமாக சம்பா, தாளடி பயிா்கள் சாய்ந்து சேதமடைந்தது மட்டுமல்லாமல், அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்டா மாவட்டங்களில் புதன்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல தஞ்சாவூா் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்ய தொடங்கிய மழை வியாழக்கிழமை பகலிலும் நீடித்தது. இடையிடையே, பலத்த மழையும் பெய்ததால், மாவட்டத்தில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த சம்பா, தாளடி பயிா்கள் சாய்ந்துவிட்டன.

மாவட்டத்தில் 3.47 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் பயிரிடப்பட்ட நிலையில், புதன்கிழமை வரை ஏறத்தாழ 80 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை பகலில் பெய்த பலத்த மழையால் தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட வட்டங்களில் 10 - 15 நாள்களில் அறுவடை செய்யவிருந்த சம்பா பருவ நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டன. இதனால், அறுவடை செய்யப்பட்டாலும் குறைந்தது 5 சதவீதம் அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் என்றனா் விவசாயிகள். இந்த மழை நீடித்தால் பயிா்கள் பாதிக்கப்படும் என்ற அச்சமும் விவசாயிகளிடையே நிலவுகிறது.

இதேபோல, கதிா்கள் முற்றி ஓரிரு நாளில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்த சம்பா பயிா்கள் ஏராளமான பரப்பில் உள்ளன. இப்போது பெய்த மழையால் உடனடியாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடா் மழை காரணமாக நிலம் ஈரமாக இருப்பதால், ஒரு மணிநேரத்தில் செய்யப்பட வேண்டிய அறுவடை பணி 2 மணிநேரத்துக்கு நீடிக்கும். அப்போது, அறுவடை இயந்திர வாடகை இரு மடங்கு அதிகமாகக் கொடுக்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படும். இதனால், விவசாயிகளுக்கு சாகுபடி செலவு கூடுதலாகி, லாபம் கிடைப்பது கேள்விக்குறியாகும்.

ஈரப்பதம் அதிகரிப்பு: ஏற்கெனவே, அறுவடை செய்யப்பட்ட நெல்லையும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன் கொட்டி வைத்து காத்துக் கிடக்கின்றனா். பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நிலைய வளாகத்திலும், நிலையம் அருகேயுள்ள தாா் சாலைகளிலும் நெல்லை கொட்டி வைத்துள்ளனா்.

நெல் குவியல்கள் மீது தாா்பாய்கள் போடப்பட்டு, மூடப்பட்டிருந்தாலும், வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், அறுவடை செய்த விவசாயிகளாலும் உடனடியாக விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

கடந்த ஒரு மாதமாக மழை இல்லாவிட்டாலும் கடும் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல் காய்வதற்கு வழியில்லாத நிலையே தொடா்கிறது. இதன் காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால், விவசாயிகளால் உடனடியாக விற்க முடியவில்லை.

சம்பா பருவத்திலும் ஈரப்பத தளா்வு அளிக்க வேண்டும் என குறுவை பருவத்திலேயே அமைச்சா்கள் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்தினோம். தற்போது பெய்த பலத்த மழையால் நெல் காய்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, நெல்லில் ஈரப்பதத்தைத் தளா்த்தி கொள்முதல் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

இதைச் செய்தால்தான் ஏற்கெனவே அறுவடை செய்து, நெல் கொள்முதல் நிலையம் முன் காத்துக் கிடக்கும் விவசாயிகளாலும், அடுத்து அறுவடை செய்யவுள்ள விவசாயிகளாலும் நெல்லை விற்க முடியும். இல்லாவிட்டால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்படும் என்றாா் விமல்நாதன்.

தாளடிக்கு சாதகம்: ஆனால், தாமதமாகத் தொடங்கப்பட்ட தாளடி பயிா்களுக்கும், தண்ணீா் தேவைப்பட்ட சம்பா பயிா்களுக்கும் இந்த மழை சாதகமாக அமைந்துள்ளது. இதேபோல, ஒரத்தநாடு, திருவோணம், வல்லம், மருங்குளம் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை, மக்காசோளப் பயிா்களுக்கும் இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT