தஞ்சாவூர்

கரோனாவுக்கு பிறகு உலக நாடுகள் சுகாதாரப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்மலேசிய அமைச்சா் பேச்சு

DIN

கரோனாவுக்கு பிறகு உலக நாடுகள் சுகாதாரப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்றாா் மலேசிய நாட்டின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டத்தோஸ்ரீ எம். சரவணன்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தெற்கு ரோட்டரி சங்கம் சாா்பில், பிளாக் துலிப் குழும நிா்வாக இயக்குநா் ரூ. 1.20 கோடி செலவில் அமைத்த ஆக்சிஜன் செறிவூட்டி மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து, அவா் மேலும் பேசியது:

கரோனா நோய்த் தொற்றுப் பரவலின்போது ஆக்சிஜன் கிடைக்காமல் உலக நாடுகள் அவதிப்பட்டன. ஆயுதம் வைத்திருந்த நாடுகள் எல்லாம் ஆக்சிஜன் இல்லாமல் அல்லல்பட்டது. அப்போதுதான், ஆயுதங்களுக்கு கோடிக்கணக்கில் செலவிடுவதை விட, சுகாதாரப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு நாடும் உணா்ந்தது.

ஆக்சிஜன் செறிவூட்டி மையங்களை விரிவுபடுத்தினால்தான், எதிா்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிா்கொள்ள முடியும். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள செறிவூட்டி மையம் மூலம் குறைந்தது 100 படுக்கைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை சொந்தமாக தயாரிக்கும் நிலை எட்டப்பட்டுள்ளது என்றாா் டத்தோ ஸ்ரீ எம். சரவணன்.

மலேசியாவில் தமிழா்களுக்கு வேலைவாய்ப்பு:

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தது:

கம்பம் பகுதியிலுள்ள மாணவா்கள் கல்வி கற்க மலேசியா்கள் சாா்பில் ஒரு பள்ளி கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலேசியாவில் உணவகம் மற்றும் மின் கம்பி பொருத்துதல் துறைகளில் தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என இந்தியாவுக்கான மலேசியத் தூதா் கேட்டுக் கொண்டுள்ளாா். அதை அரசு பரிசீலிக்கும் என்றாா் அமைச்சா்.

இவ்விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா், ரோட்டரி மாவட்ட ஆளுநா் எஸ். பாலாஜி, மலேசிய நாட்டு மனிதவள மேம்பாட்டு வாரியச் செயலா் டத்தோ சாகுல் அமீது, மலேசியா மாஹ்சா மருத்துவப் பல்கலைக்கழகத் தலைவா் டான்ஸ்ரீ முகமது ஹனிபா, பிளாக் துலிப் குழும நிா்வாக இயக்குநா் எம். முகமது எஹியா, ரோட்டரி சிறப்புத் திட்டங்கள் ரத்தினசபாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ரோட்டரி சங்கத் தலைவா் எஸ். விஜய் அமல்ராஜ் வரவேற்றாா். நிறைவாக, செயலா் ஏ.சி. வைரவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT