தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு சிறப்பான வரவேற்பு 

5th Dec 2022 02:33 PM

ADVERTISEMENT

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பட்டுக்கோட்டையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நியூசிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிக்கு இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட எட்டு நபர்களில் இருவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். இதில் ரவி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.  மற்றொருவர் பட்டுக்கோட்டை  அண்ணாநகர் செல்வமுத்து பெயின்டர் மகள் லோகப்பிரியா (22).  இந்த இரண்டு பேரும், கடந்த வாரம் பட்டுக்கோட்டையிலிருந்து காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள நியூசிலாந்து புறப்பட்டு சென்றனர். 

இந்நிலையில் நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் லோகப் பிரியா 52 கிலோ ஜூனியர்  பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கம் வென்று சாதனை படைத்தார். மாஸ்டர் ஜிம் ரவி ஆண்களுக்கான போட்டியில் 93 கிலோ மாஸ்டர் 2 பிரிவில் 490 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். இந்நிலையில் லோகப் பிரியா தங்கப்பதக்கம் வென்ற அதே வேளையில் லோகப் பிரியாவின் தந்தை செல்வமுத்து மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

இந்த நிலையில் தனது நீண்ட கனவாக இருந்த தங்கப்பதக்கம் வென்ற மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல் தனது தந்தையின் இறப்புச் செய்தி கேட்டு மனம் உடைந்த தங்க மங்கை லோக பிரியா வெள்ளிப் பதக்கம் வென்ற தனது பயிற்சியாளர் மாஸ்டர் ரவிச்சந்திரன் உடன் இன்று பட்டுக்கோட்டைக்கு வந்தார். அவர்கள் இருவருக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து பொன்னாடை போர்த்தி மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இருந்தும் தனக்கு அளிக்கப்படும் இந்த மரியாதையை பார்க்க தனது தந்தை இல்லையே என்று கண்ணீர் விட்டு அழுதார். 

ADVERTISEMENT

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி வாழ்த்து கூறினர். மேலும் தான் மேலும் சாதனை செய்யப் போவதாகவும் தன்னுடைய குடும்பம் வறுமை நிலையில் உள்ளதால் அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT