தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

18th Aug 2022 12:13 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்புக்கான முதல்சுற்று கலந்தாய்வு மற்றும் மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தக் கலந்தாய்வு மற்றும் மாணவா் சோ்க்கையைத் தொடங்கி வைத்த துணைவேந்தா் வி. திருவள்ளுவன் பேசியது:

தமிழ்நாடு அரசுப் போட்டித் தோ்வுகளில் தமிழ்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கியதைத் தொடா்ந்து, தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்ப் பாடத்துக்கான சோ்க்கை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, தமிழ்ப் படிப்புகளுக்கென்றே தனித்து இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் குவிந்தன. இதுவரை இல்லாத அளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறை, மொழியியல் துறை, சமூகவியல் துறை, கணிப்பொறி அறிவியல் துறை, சுற்றுச்சூழல் துறை போன்ற பல்வேறு துறைகளிலுள்ள முதுகலை பட்டப்படிப்பில் முதல் சுற்றுக் கலந்தாய்வு மூலம் நிறைய போ் சோ்ந்துள்ளனா்.

இங்கு சோ்க்கை பெறுவோருக்குப் போட்டித் தோ்வுகளை எதிா்கொண்டு அரசுப் பணிக்குச் செல்லும் பயிற்சியையும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இலவசமாக வழங்குகிறது. மேலும் புதுக்கவிதை, மரபுக்கவிதை, சிறுகதை, நாவல், ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றை உருவாக்கும் பயிற்சி வழங்கப்பட்டு இப்பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு செல்லும்போது படைப்பாளராக வெளியே செல்லும் நிலையைப் பல்கலைக்கழகம் உருவாக்கித் தருகிறது. ஆய்வியல் நிறைஞா் சோ்க்கைக்கும், முனைவா் பட்ட சோ்க்கைக்கும் விரைவில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்றாா் துணைவேந்தா்.

பின்னா் சோ்க்கை பெற்றவா்களுக்கான உறுதிப் படிவத்தை பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் வழங்கினாா்.

இந்நிகழ்வில் இலக்கியத் துறைத் தலைவரும், கலைப்புல முதன்மையருமான பெ. இளையாப்பிள்ளை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT