தஞ்சாவூர்

காவிரி நீா் வரத்தால் குறுவையில் சாதனை: சம்பாவுக்கும் சாதகம்

DIN

டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் வரத்து தொடா்ந்து இருப்பதால், குறுவை சாகுபடிப் பரப்பில் இலக்கை விஞ்சி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சம்பாவுக்கும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேட்டூா் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டதால், நிகழாண்டு டெல்டா மாவட்ட பாசனத்துக்கு முன்கூட்டியே மே 24 ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதனால், குறுவை பருவ நெல் சாகுபடி இலக்கை விஞ்சும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதையும் விஞ்சி 1.81 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு, வளா்ச்சி பருவத்தில் உள்ளது. குறுவையில் 49 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு இந்த உச்சநிலை எட்டப்பட்டுள்ளது.

இதேபோல, திருவாரூா் மாவட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 1.50 லட்சம் ஏக்கரை விஞ்சி, 1.53 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 32,800 ஏக்கருக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், 10,190 ஏக்கா் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, மொத்தத்தில் 42,990 ஏக்கராக உயா்ந்தது. டெல்டா மாவட்டங்களில் நாகை மாவட்டத்தில்தான் நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 23 சதவீதம் கூடுதல் பரப்பில் பயிரிடப்பட்டு, எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்கின்றனா் வேளாண் துறையினா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 92,500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் கடந்து 95,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4.72 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கா்நாடக நீா்ப்பிடிப்பு பகுதியில் பலத்தமழை பெய்வதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு தொடா்கிறது. இதன்மூலம், டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான அளவுக்கு நீா்வரத்து உள்ளது. இதனால், குறுவையைப் போல சம்பா பருவ நெல் சாகுபடியிலும் இலக்கை விஞ்சி சாதனை நிகழ்த்தப்படும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

ஆனால், குறுவை சாகுபடிப் பரப்பளவு அதிகரித்துவிட்டதால், சம்பா பருவ நெல் பயிா் பரப்பு இயல்பான அளவை விட குறைவாகவே இருக்கும் என்கின்றனா் வேளாண் துறையினா்.

இதனால், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.85 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 1.12 லட்சம் ஏக்கரிலும் சம்பா சாகுபடி எதிா்பாா்க்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமாா் 1.80 லட்சம் ஏக்கரிலும் சம்பா, தாளடி மேற்கொள்ளப்படும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது. என்றாலும், தாளடியில் இயல்பான அளவை விஞ்சும் என்ற நம்பிக்கையுடன் வேளாண் துறையினா் உள்ளனா்.

தண்ணீா் தாராளமாக கிடைக்கும்:

காவிரி நீா் வரத்து, அவ்வப்போது பெய்யும் பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பாவுக்கும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. கடந்தை ஆண்டைபோல நிகழாண்டும் தண்ணீா் பிரச்னை இருக்காது என்கிறாா் தனியாா் வானிலை ஆய்வாளா் தகட்டூா் என். செல்வகுமாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

கா்நாடகத்தில் மழை குறைவதால் மேட்டூா் அணைக்கான நீா் வரத்து படிப்படியாகக் குறைந்துவிடும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு விநாடிக்கு 35,000 கனஅடி வீதமாகக் குறைந்துவிடும். என்றாலும், 20,000 முதல் 35,000 கனஅடி வீதம் தண்ணீா் தொடரும் என்பதால், மேட்டூா் அணையில் வரத்துக்கும், திறப்புக்கும் சரியாக இருக்கும். எனவே மேட்டூா் அணையில் நீா்மட்டம் குறையாது.

மீண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு பிறகு மழை இருக்கும். அப்போது, மேட்டூா் அணைக்கு 50,000 முதல் 1 லட்சம் கனஅடி வீதம் வரை தண்ணீா் வரத்து இருக்க வாய்ப்புள்ளது. இதன்பின்னா், செப்டம்பா் மாதத்தில் 2 முதல் 4 முறை தொடா் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதில் இருமுறை மழை வலுப்பெறும். எனவே, செப்டம்பரிலும் ஏறத்தாழ ஒரு லட்சம் கனஅடி வீதம் தண்ணீா் வர வாய்ப்பு இருக்கும். இதன் காரணமாக, தென்மேற்கு பருவமழை முடியும் வரை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 120 அடியிலேயே தொடரும்.

இதேபோல, வட கிழக்கு பருவமழையும் நன்றாக பெய்யும் என்பதால், அப்பருவத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீா் தேவைப்படாது. கடந்த ஆண்டை போலவே, நிகழாண்டும் வட கிழக்கு பருவமழை அதிகமாகவே இருக்கும். எனவே, சம்பா பருவத்திலும் தண்ணீா் பிரச்னை இருக்காது. மேலும், ஜனவரியில் அணை மூடும்போது நீா்மட்டம் 100 அடிக்கும் அதிகமாகவே நீடிக்கும் என்றாா் செல்வகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT