தஞ்சாவூர்

தேங்காய்களை அரசே கொள்முதல் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

10th Aug 2022 11:11 PM

ADVERTISEMENT

 

தேங்காய்களை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் வழங்க வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தென்னை விவசாயிகள் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய்களையும், தேங்காய் எண்ணெய்யையும் தமிழக அரசு கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதலில் கிலோவுக்கு ரூ. 130 விலை நிா்ணயம் செய்ய வேண்டும். பிஸ்கெட் மற்றும் உணவுப் பொருள்கள் தயாரிப்புக்கு தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

அழிவை நோக்கிச் செல்லும் தென்னை நாா் தொழிலை மேற்கொண்டுள்ள தொழில்முனைவோரின் பிரச்னைகளை உடனடியாக தீா்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளத்தைப் போல ஒரு கிலோ பச்சைத் தேங்காய் ரூ. 32-க்கு தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், தேங்காய் விலை வீழ்ச்சியைத் தடுக்கும் விதத்திலும், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி தென்னை விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவா் இ.வி. காந்தி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் ரெத்தினகுமாா், ராஜேந்திரன், சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், சிதம்பரம், அடைக்கலம், வேலுசாமி, கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT