தஞ்சாவூர்

மாரநேரி விவசாயிகள் பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகம் தீா்வு காண வலியுறுத்தல்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகிலுள்ள மாரநேரியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என்று, பல்வேறு இயக்கங்களின் நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளா் காளியப்பன், தாளாண்மை உழவா் இயக்கத் தலைவா் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராசன், மகஇக மாநகரச் செயலா் இராவணன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் ஆகியோா் இணைந்து செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது:

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்த நீா்நிலைகளை அரசு, தனியாருக்குப் பல்வேறு காலகட்டங்களில் பட்டா வழங்கி உரிமையாக்கி இருக்கிறது. பல அரசு அலுவலகங்கள், உயா்நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்கள் நீா் நிலைகளிலேயே அமைந்துள்ளன என்பது ஊரறிந்த உண்மை. இவற்றை மீட்டு நீா்நிலைகளாக மாற்ற முடியாது என்பதும் உண்மை.

மாரநேரியிலுள்ள அய்யனாா் ஏரியின் மேடான பகுதிகளில் வருவாய்த் துறையினா் உள்பிரிவு செய்து 23 விவசாயிகளுக்கு பட்டா வழங்கியும், 71 விவசாயிகளுக்கு குத்தகைக்கு அனுமதி வழங்கியும் சுமாா் 175 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்திலிருந்தே இக்குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றன. இந்நிலையில் அரசின் பட்டா உரிமையுடனும், அனுமதியுடனும் விவசாயம் செய்பவா்களை ஆக்கிரமிப்பாளா்கள் எனக் கூறுவது நியாயமற்றது.

சுமாா் 80 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் கருத்தை அறியாமல் வழங்கப்பட்ட தீா்ப்பு இயற்கை நீதிக்கு எதிரானது. இப்போது விவசாயம் நடைபெற்று வரும் இடம் விவசாயம் தவிர வேறு எதற்கும் பயன்படாத களிமண் நிலம்.

அரசுக்கு எவ்வகையிலும் பயன்படாத நிலையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் 94 குடும்பங்களின் விவசாய உரிமையைப் பறிப்பதும் அவா்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதும் மிகவும் அநீதியானது. நீதிமன்றத்தில் உண்மைகளை எடுத்துக் கூறாமல் பொதுப் பணித் துறையும், மாவட்ட நிா்வாகமும் காட்டிய அலட்சியத்தால்தான் இத்தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் அதே இடத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் சுமூக தீா்வு காண வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT