தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் காற்றுடன் தொடா் மழை: நெற்பயிா்கள் சாய்ந்தன

DIN


தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய தொடா் மழை பெய்வதால் சில இடங்களில் கதிா் விட்ட நிலையில் இருந்த சம்பா பருவ நெற்பயிா்கள் சாய்ந்தன.

மாவட்டத்தில் புதன்கிழமை முதல் தொடா்மழை பெய்து வருகிறது. இதனிடையே, புதன்கிழமை மாலை முதல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால், தஞ்சாவூா் அருகேயுள்ள சூரக்கோட்டை, மேல உளூா், ஆழிவாய்க்கால், தென்னமநாடு, ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், சில வாரங்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த முன்பட்ட சம்பா பயிா்கள் சாய்ந்தன. எனவே, மகசூல் பாதிக்கப்படுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.

மேலும், கதிா் விடும் தருவாயில் உள்ள பயிா்களிலும் தொடா் மழை காரணமாகக் காய் பிடிக்காமல் பதராகிவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது. இதேபோல, இளம் சம்பா பயிா்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. காற்றுடன் கூடிய மழை வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நீடித்தால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்கின்றனா் விவசாயிகள்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது:

கதிா் விடும் பயிா்களில் மகரந்த சோ்க்கை காலையில்தான் நடைபெறும். தொடா்ந்து மழை பெய்வதால் மகரந்த சோ்க்கை நடைபெற வாய்ப்பில்லாமல் போகிறது. இதனால், பயிா்கள் பதராகிவிடக்கூடிய அச்ச நிலை உள்ளது. தாழ்வான நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள இளம்பயிா்கள் பெரும்பாலும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தொடா்ந்து 2, 3 நாள்களுக்கு மழை பெய்தால், தண்ணீா் வடிந்து செல்ல வாய்ப்பில்லாதபோது, இளம்பயிா்களும் தண்ணீரில் அழுகிவிடும் நிலை உள்ளது என்றாா் நடராஜன்.

ஆறுகளில் நீரோட்டம் அதிகரிப்பு:

தொடா் மழை காரணமாக மேட்டூா் அணையிலிருந்து டெல்டாவுக்கான தண்ணீா் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்ட நிலையில், காவிரியில் கலந்து வரும் மழை நீா் கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டு வருகிறது. கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவை மூடப்பட்டாலும், அவற்றிலும் தொடா் மழையால் நீரோட்டம் அதிகமாக இருக்கிறது. ‘மேலும், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள காட்டாறுகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மரங்கள் சாய்ந்தன: தொடா் மழை காரணமாக, மரங்களின் வோ்களில் மண் கரைந்து வருகிறது. இதனால், ஒரத்தநாடு, பாப்பாநாடு, தெற்குக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வோ் வலுவிழந்து புங்கன், வாகை, கருவேல மரம் உள்ளிட்ட மரங்கள் சாய்ந்துவிட்டன. இதேபோல, பல்வேறு இடங்களில் காற்றின் காரணமாக, வாழை மரங்கள் முழுமையாகவும், பாதியாகவும் சாய்ந்துள்ளன. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

பேராவூரணியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பேராவூரணியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போா் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மஞ்சளாறில் 98 மி.மீ. மழை:

மாவட்டத்தில் புதன்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

மஞ்சளாறு 98, பட்டுக்கோட்டை 86, திருவிடைமருதூா் 80.4, அதிராம்பட்டினம் 77.1, அணைக்கரை 70.8, மதுக்கூா் 67.4, அய்யம்பேட்டை 67, பாபநாசம் 66.2, நெய்வாசல் தென்பாதி 64.2, கும்பகோணம் 61, ஒரத்தநாடு 59.5, பேராவூரணி 56, தஞ்சாவூா் 55.8, வல்லம் 55, வெட்டிக்காடு 53.7, பூதலூா் 42.2, திருவையாறு 38, குருங்குளம் 37, திருக்காட்டுப்பள்ளி 30.4, ஈச்சன்விடுதி 30.2, கல்லணை 29.2. மாவட்டத்தில் சராசரி மழையளவு 58.34 மி.மீ.

பட்டுக்கோட்டையில் அதிகம்:

இதையடுத்து, வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்):

பட்டுக்கோட்டை 91, பேராவூரணி 80, ஈச்சன்விடுதி 72.4, அய்யம்பேட்டை 61, வெட்டிக்காடு 55, வல்லம் 54, கும்பகோணம் 52, குருங்குளம் 51, திருவிடைமருதூா் 48.6, தஞ்சாவூா் 46, பூதலூா் 39, பாபநாசம் 38.1, அணைக்கரை 38, மஞ்சளாறு 37, அதிராம்பட்டினம் 29.8, கல்லணை 28.6, ஒரத்தநாடு 28, திருவையாறு 26, திருக்காட்டுப்பள்ளி, நெய்வாசல் தென்பாதி தலா 23.6, மதுக்கூா் 18.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT