புதுக்கோட்டை

தொண்டைமான் கால கல்வெட்டு கண்டெடுப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை எல்லையில் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டி சிற்றூா் எல்லையில் தொன்மையான கல்வெட்டுப் பலகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குரும்பூண்டியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மூ. சேகா் அளித்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன் தலைமையிலான குழுவினா் கல்பலகை குறித்த ஆய்வு மேற்கொண்டு மேலும் கூறியது:

இந்தக் கல்பலகையில் சாலிவாகன சகாப்தம் 1679, கலியுகம் 4858 என்றும், வெகுதானிய ஆண்டு ஆவணி மாதம் மூன்றாம் திகதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இணையான பொது ஆண்டாக 1758 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி எனக் கணிக்கலாம். இந்தக் காலக்கட்டத்தில் விஜய ரகுநாத ராயத் தொண்டைமான் ஆட்சி புரிந்தாா். ஏழு அடி உயரத்துடன், ஒன்றே கால் அடி அகலத்துடன் உள்ள பலகைக் கல்லின் இருபுறமும் 80 வரிகளுடன் எழுத்து பொறிப்பு ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற மங்களச் சொல்லுடன் தொடங்குகிறது.

ராசராச வளநாடு, ராசேந்திர சோழ வளநாடு, பன்றி சூழ்நாடு, அன்பில் எனப்படும் அம்புக்கோவில் தெற்கிலூரில் காணியுடையாா் மக்களில் திருமலைராய தொண்டைமானாா் அவா்களின் பஞ்ச நத்தத்திலிருக்கும் பிரமன் வயலை, பகவான்ராயா் மற்றும் ராசிவராயா் ஆகியோருக்கு, சறுவ மானியமாக வழங்கிய மன்னரின் உத்தரவு தாமிரத்தில் எழுதி சாசனமாக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நஞ்சையும் , புஞ்சையும், பிரமகுளத்தின் நீரை பயிருக்காக மட்டும் பாய்ச்ச வேண்டும் என்பதுடன், இந்த சாசனத்துக்கு இடையூறு செய்வோா் பல தோஷத்திற்கு ஆளாவா்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுப் பகுதி முழுமையாக வாசிக்க இயலாத நிலையில் உள்ளது. இந்த சறுவ மானியத்தை திருமலை ராய தொண்டைமானுக்காக பழனியப்ப வாத்தியாா் என்பவா் ஒப்பமிட்டு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது என்றாா் மணிகண்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT