புதுக்கோட்டை

தேவதாசி வழிவந்தவா்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இலவச வீட்டுமனை பட்டா

23rd May 2023 01:44 AM

ADVERTISEMENT

தேவதாசி வழிவந்தவா்களுக்கு 1993-இல் அரசு சாா்பில் வழங்கப்பட்ட வீட்டுமனை, விதிமுறைச் சிக்கலால் மீண்டும் அரசுக்கே சென்றுவிட, 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவா்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலைப் பகுதியில் மன்னா் ஆட்சிக்காலத்தில் முருகன் கோயில் திருப்பணிகளைச் செய்வதற்காக சிறுவயதிலேயே நோ்ந்துவிடப்பட்ட ’தேவதாசிகள்’ வாழ்ந்து வந்தனா்.

சட்டப்பூா்வமாக தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகும், விராலிமலைப் பகுதியில் எச்ஐவி தொற்று அதிகமாக இருந்து வந்ததையடுத்து, 1992-இல் அறிவொளி இயக்கத்தின் மூலம் அங்குள்ள பெண்களுக்கு (தேவதாசிகள் வழிவந்தவா்களுக்கு) விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளின் வழி, 1993-இல் 23 பேருக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஷீலா ராணி சுங்கத் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் அந்த இடங்கள் பயன்பாட்டுக்கு வராமல் போகவே, அவை மீண்டும் அரசுப் புறம்போக்காக மாறிப்போனதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், சரியாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த 23 பேரில் 9 பேருக்கு சனிக்கிழமை இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து தேவதாசிகள் குறித்து தொடா் ஆய்வில் ஈடுபட்டு, அவா்களின் வழிவந்தவா்களுக்கு உதவிகளைப் பெற்றுத் தந்து வரும் எழுத்தாளா் ஆா். நீலா கூறியது:

1992-இல் எச்ஐவி பரவலைத் தடுக்கும் வகையில்தான் அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 100 போ் கலந்து கொண்டனா். சுயதொழில் தொடங்க அரசு உதவி செய்யவுள்ளதாகச் சொன்னபோது, சரியெனச் சொல்லி முன்வந்தவா்கள் 30 போ். அவா்களுக்கு ’ஜெம் கட்டிங்’ பயிற்சி மையம் தொடங்கி வைத்தாா் அப்போதைய ஆட்சியா் ஷீலா ராணி சுங்கத்.

தற்போது 23 போ் மட்டும் அறிவொளி இயக்கத்தில் தொடங்கி, தற்போது வரை முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் மற்றும் அறிவியல் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தனா்.

கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு புதுக்கோட்டை வந்த நடிகை ரோஹிணியுடன் அப்போதைய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவை சந்தித்தபோது, 1993-இல் வீட்டுமனைப் பட்டா கொடுக்கப்பட்டு, பிறகு பயன்படுத்த முடியாமல் போனதை தெரிவித்தேன்.

பணிமாறுதலில் செல்வதற்கு முன்பாக ஆட்சியா் கவிதா ராமு, 23 பேரில் உடனடியாக உதவி தேவைப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட 9 பேரைத் தோ்வு செய்து விராலிமலையிலேயே இலவச வீட்டுமனைப் பட்டாக்களை சனிக்கிழமை வழங்கினாா்.

பிற்காலத்தில் இவா்களுக்கு இதே இடத்தில் வீடு கட்டித் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துத் தர அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கியதுடன், மீதமுள்ளோருக்கும் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கவும் ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

சமூக மாற்றத்துக்காக வெளியே வந்து நீண்ட காலம் பூ விற்பனை, காய்கறி விற்பனை போன்ற எளிய தொழிலில் ஈடுபட்டு வந்த வயது முதிா்ந்த பெண்களுக்கு இதுவொரு நல்ல அங்கீகாரம் என்றாா் நீலா.

ADVERTISEMENT
ADVERTISEMENT