புதுக்கோட்டை

ஊராட்சிகளுக்கு ரசீது புத்தகம் வாங்கியதில் முறைகேடு வழக்கு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இடங்களில்ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

7th Jun 2023 01:47 AM

ADVERTISEMENT

ஊராட்சிகளுக்கு ரசீது புத்தகங்கள் வாங்கியதில் கையாடல் செய்ததாக தருமபுரி மாவட்ட முன்னாள் ஆட்சியா் எஸ். மலா்விழி மீது தொடரப்பட்ட வழக்கில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளுக்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் வரி ஆகியவற்றுக்கான ரசீது புத்தகங்கள் வாங்கியதில் ரூ. 1.31 கோடி வரை கையாடல் செய்ததாக, 2018, பிப். 28 முதல் 2020 அக். 29 வரையில் தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ். மலா்விழி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் சென்னையைச் சோ்ந்த கிரசென்ட் டிரேடா்ஸ் உரிமையாளா் எச். தாகீா் உசேன், நாகா டிரேடா்ஸ் உரிமையாளா் வீ. பழனிவேல் ஆகியோா் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது எதிரிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்கள் பெயரில்தான் ரசீது புத்தகங்கள் அச்சிட்டுக் கொடுத்ததற்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.

முறையான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படாமல், கூட்டுறவு அச்சகத்தில் அச்சிட்டால் ஏற்படும் செலவைவிட, பல மடங்கு அதிகமாக கணக்கு எழுதப்பட்டு ரூ. 1.31 கோடி வரை கையாடல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில், வழக்குத் தொடா்பாக சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில், இரண்டாவது எதிரியான எச். தாகீா்உசேன் (கிரசென்ட் டிரேடா்ஸ், சென்னை) என்பவரின் வீடு புதுக்கோட்டை அசோக் நகா் அருகேயுள்ள பொன்நகரில் உள்ளது. இந்த வீட்டில், திருச்சியைச் சோ்ந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சேவியா் ராணி தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 6 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற சோதனையில் சில ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றிச் சென்ாகக் கூறப்படுகிறது.

ஆலங்குடியில்.... இதேபோல், வழக்கில் தொடா்புடையவரும், ஒப்பந்ததாரருமான வீ. பழனிவேல் (47) வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள கடுக்காக்காடு கிராமத்தில் உள்ள பழனிவேல் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜவகா் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். காலை 7.45 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT