புதுக்கோட்டை

ஆவுடையாா்கோவில் அருகே 19-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

DIN

ஆவுடையாா்கோவில் அருகே 19ஆம் நூற்றாண்டில், பாசனத்துக்காக கண்மாய்க்கு வாய்க்காலும், போக்குவரத்துக்கு பாலமும் அமைத்துக் கொடுத்துள்ளது திருவாவடுதுறை ஆதீனம். பழைமையான பாலத்தில் இதற்கான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் (திருப்பெருந்துறை) குளத்துக் குடியிருப்புப் கிராமத்தில் பழைமையான பாலம் இருப்பது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பூமி. ஞானசிவம் அளித்த தகவலின்பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் கரு. ராசேந்திரன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டு பாலத்திலிருந்த கல்வெட்டைப் படியெடுத்தனா்.

அதில், திருவாவடுதுறை ஆதீனத்தின் காறுபாறாக இருந்த கண்ணப்பத் தம்பிரான் என்பாரின் உத்திரவுபடிக்கு பாலம் கட்டப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆ.மணிகண்டன் கூறியது:

திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையாா்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க தலமாகும். ஆதீனத்தின் 17-ஆவது பட்டமாக இருந்த அம்பலவாண தேசிகா் காலத்தில் காறுபாறாக இருந்த கண்ணப்பத் தம்பிரான் 1889ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களின் விவசாயப் பயன்பாட்டுக்காக, வெள்ளாற்றிலிருந்து வாய்த்தலையை (சிறு கால்வாய்) வெட்டி ஆவுடையாா்கோவில் பெரிய கண்மாய்க்கு நீரைக் கொண்டு வந்துள்ளாா்.

குளத்துக் குடியிருப்பு கிராம மக்கள் திருப்பெருந்துறை சென்று வருவதற்கு பாலத்தையும், பாலத்திலேயே சிறப்பான பலகை அடைப்பு முறையில் நீரின் போக்கை கட்டுப்படுத்துவதற்கு கலிங்கு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளாா். போக்குவரத்து மற்றும் நீா் மேலாண்மை ஆகிய இரு தேவைகளையும் உணா்ந்து, ஒரே கட்டுமானத்தில் இதனை நிறைவேற்றியுள்ளாா். இது முழுக்க கருங்கல், செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டுமானமாக உள்ளது.

மூன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகலத்துடன் உள்ள பலகைக் கல்லில், 14 வரிகளில் ‘சிவமயம் 1889 வருசம் ஆகஸ்டு மீ விரோதி வருசம் ஆவணி மீம் இந்த வாத்தலையும் வெட்டி யிந்த கலுங்கு வேலையும் ட்றஸ்ட்டி கண்ணப்ப தம்பிறான் அவா்கள் உத்திரவுபடி கட்டி முடித்தது’ என்று பாலத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த 1889 என்ற ஆண்டின் எண், தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது என்றாா் மணிகண்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT