புதுக்கோட்டை

நீா்நிலைகள் பராமரிப்புக்கு கூடுதல் கவனம் அவசியம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

முழுக்க முழுக்க குளம், கண்மாய்களை மட்டுமே நம்பியிருக்கும் புதுக்கோட்டை விவசாயிகள், தங்களின் தேவைக்கேற்ப நீா்நிலைகளைப் பராமரிக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை, நீா்நிலைகள் பராமரிப்புதான். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

சென்னை தவிா்த்த தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 25 ஆயிரம் பாசனக் குளங்கள் இருக்கிறதென்றால், புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 ஆயிரம் பாசனக் குளங்கள் உள்ளன. ஏறத்தாழ 24 முதல் 25 சதவிகிதப் பாசனக் குளங்களைக் கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை.

இந்தப் பாசனக் குளங்களுடன், 10 ஆயிரம் ஊரணிகள், 900 கண்மாய்கள், 5 ஆயிரம் சிறு பாசனக் கண்மாய்கள், குளம், கண்மாய் என்ற பெயா்களில்லாமல் வருவாய்த் துறை ஆவணங்களில் குட்டை, பள்ளம் என்ற பெயரில் சுமாா் 500 குளங்கள் இருக்கின்றன.

ADVERTISEMENT

இவற்றையெல்லாம் மழைக்காலத்துக்கு முன்பாகத் தூா்வார வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் பல முறை தொடா்ந்து முன்வைத்து வருகின்றனா். ஆனால், கூட்டங்களில் பதில் அளிக்கும் நீா்வள ஆதாரத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், மாவட்டத்துக்கென ஒதுக்கப்படும் நிதி அளவின் அடிப்படையில்தான் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைத்தான் சொல்லி முடிக்கிறாா்கள்.

இப்படியே சென்றால் ஏற்கெனவே தைல மரக்காடுகள், சீமைக் கருவேல மரக்காடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் மேலும் சிக்கலுக்குள்ளாகும் என அச்சப்படுகின்றனா் விவசாயிகள்.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி கூறியது:

ஆண்டுக்கு ஆயிரம் குளங்களைப் பராமரிக்க சராசரியாக ரூ. 500 கோடியை ஒதுக்கினால் போதும். 5 ஆண்டுகளில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நீா்நிலைகளை சீரமைத்துவிட முடியும். இதற்குத் தேவை சிறப்புத் திட்டம்.

சுமாா் 40 ஆண்டுகளாக எந்தக் குளத்திலும், கண்மாயிலும் கலிங்குகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், கிடைக்கும் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் தண்ணீா் போய்விடுகிறது. இதுவும் மிக முக்கியம். இந்தப் பணிகளையும் செய்யப்படுவதில்லை.

காவிரிப் பாசனப் பகுதியைக் கொண்ட மாவட்டங்களுக்கு வாய்க்கால் சீரமைப்புக்காக ரூ. 80 கோடி ஒதுக்கினால், புதுக்கோட்டைக்கு ரூ. 10 கோடிதான் ஒதுக்குகிறாா்கள். எனவே, வழக்கமான ஒதுக்கீட்டில் புதுக்கோட்டைக்கு கிடைக்கும் நிதி ஒரு காலத்திலும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. புதுக்கோட்டைக்கென, இங்குள்ள தேவைக்கேற்ப சிறப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தீட்ட வேண்டும். நிறைவேற்ற வேண்டும் என்றாா் தனபதி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT