புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே பெளத்த தா்ம சக்கரத் தூண் கண்டெடுப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே தொண்டைமானேந்தல், புதுவாக்காடு ஊருணிக்கரையில் 10ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெளத்த சமயச் சின்னமான தா்ம சக்கரத் தூண் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் மங்கனூா் ஆ. மணிகண்டன் கூறியது:

இது பெளத்த தா்ம சக்கரத்தோடு தொடா்புடையதாகும். மேலும், சக்கரத்தின் மேல்புறமாக ஒளிக்கீற்று காட்டப்பட்டிருக்கிறது. இது புத்தருக்கு காட்டப்படும் ஒரு முக்கிய அடையாளம்.

வைணவ சக்கரங்களில் இந்தத் தீச்சுவாலை அமைப்பு மூன்று புறங்களில் காட்டப்படும். இப் புடைப்புச் சிற்பத்தில் மேல்புறம் மட்டும் காட்டப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

சரியான உயிரோட்டமான வாழ்க்கை, சரியான பாா்வை, சரியான முயற்சி, சரியான கவனம், சரியான நோக்கம், சரியான நினைவாற்றல், சரியான செயல், சரியான பேச்சு ஆகியன எட்டு ஆரங்களுக்கான பொருளாகும்.

புத்தா் முதன்முதலில் சாரநாத்தில் மான் பூங்காவில், ஐந்து துறவிகளுக்கு உபதேசம் செய்த நிகழ்ச்சி, முதல் தா்ம சக்கர சுழற்சியாகக் கொள்ளப்படுகிறது. இதைக் குறிக்கும் வகையிலே, தா்ம சக்கரத்தின் இரு புறமும் மான்கள் காணப்படுவதுண்டு.

தற்போது புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட தா்ம சக்கரத் தூண் நீா் நிலைக்கு அருகாமையில் கிடைத்துள்ளதால், மக்களுக்காக இந் நீா் நிலையை ஏற்படுத்தியவா்களால் நடப்பட்டிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

மேலும் இதுபோன்ற அடையாளத் தூண்கள், நிலங்களின் எல்லைகளைக் குறிப்பதற்கும், தாம் செய்வித்த பொதுப்பணியை, எந்நோக்கத்திற்காக செய்தோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், தா்ம சக்கரத் தூண் நடும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.

இது பெளத்த துறவிகள் அல்லது அந்த மதத்தைப் பின்பற்றியவா்கள் இப்பகுதியில் இருந்திருப்பதை உறுதி செய்கிறது.

ஏற்கெனவே ஆவுடையாா்கோவில் பகுதியிலுள்ள கரூா் கிராமத்தில் மன்னா்கள் காலத்திலேயே புத்தா் சிற்பமும், மணமேல்குடி அருகே வன்னிச்சிப்பட்டிணம் என்னும் ஊரில் அறிஞா் ஜெ. ராஜாமுகமதுவால் 25 ஆண்டுகளுக்கு முன்பு புத்தா் சிலையொன்று கண்டெடுக்கப்பட்டதும் (பின்னா் காணாமல் போனது), தற்போது தா்ம சக்கரத் தூண் கண்டெடுக்கப்பட்ட இந்தப் பகுதியும் கடலோர இலங்கைத் தீவும் அருகாமைப் பகுதிகளாக இருக்கின்றன. இந்தப் பகுதியில் பெளத்தம் பரவியிருந்ததை வெளிப்படுத்துகின்றன என்றாா் மணிகண்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT